அதிகாலையே

அதிகாலையே


நீடு துயில் நீக்குகிறாய்.!

நீயிருந்து எழுப்புகிறாய்! நித்தம் வரும் புத்துணர்வே அதிகாலையே.!


ஏடுதனை விரியென்றாய்

எழுதுகோல் எடுவென்றாய்

எனக்குள்ளே ஔிதந்த அதிகாலையே!


பாடு இதைப் பாடென்றாய்..

பாமரனைப் பார் என்றாய்.. பைந்தமிழாய் எனக்குள்ளே அதிகாலையே!


நாடு மொழி விழிகளென்றாய்..

நமதுவுயிர்த் தேசமென்றாய்..

பீடுநடைப் போடவந்தாய் அதிகாலையே!


காக்கைக் குருவிகளை

கருங்குயிலை கிளிகளையே..

கானம் இசைக்க வைத்தாய் அதிகாலையே!


நோக்கை இலட்சியத்தை 

நூறுகோடி கனவுகளை 

பார்க்கச் செயல்பெறவே

பனிமழையில் தோன்றுகிறாய் அதிகாலையே!


யாக்கை எடுத்தப்பின்னே..

ஏதற்காக நான் பிறந்தேன்.?

நோக்கவுரை எழுதுகிறாய் அதிகாலையே.!

 

தேக்கம் இனியில்லை

தூக்கமும் இல்லை.. நான்

துணிவோடு எழுந்து வர

துயில் களைய வந்தனையே அதிகாலையே.!


செம்பருதி கடல் குளித்தான்.. செவ்வானம் தலைதுவட்டி.. நம்குருதி ஓட்டத்தை.. நாள்தோறும் காணவைத்தாய் அதிகாலையே.!


தெங்கிள நீர் சுவைதன்னை.. தேன் மதுர மொழிதன்னை.. பொங்குகிற அலைநடுவே பொழுதாகி புலரவைத்தாய்! அதிகாலையே.!


தங்குதடை தனையகற்றி.. தனைச்சுற்றும் பூமியினை.. எங்கும் எழிலாய் காண எமை இங்கு வந்து எழுப்புகிறாய் அதிகாலையே.!


கங்குளினை உள்ளடக்கி காலையிளம் கன்னியென.. காட்சிதந்து மாட்சிபெற ஆட்சி செய்ய வந்துவிட்டாய் அதிகாலையே.!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%