சிவகங்கை, ஆக. 27-
இந்திய அரசின் 'நில அடுக்கு' (Land Stack) திட்டம், நில ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குவதன் மூலம், பொதுமக்கள் தங்கள் நிலம் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் பெறுவதற்கு உதவும். தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் முன்னோட்டப் பணிகள் காஞ்சிபுரம் மற்றும் காரைக்குடியில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சிவகங்கை கலெக்டர் கா.பொற்கொடி தலைமை யில், துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழக சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சக நில வளத்துறையின் உயர்மட்டக் குழுத் தலைவர் மற்றும் மகாராஷ்டிரா தலைமைத் தேர்தல் அலுவலர் சொக்கலிங்கம், இ.ஆ.ப., பங்கேற்றுக் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் நிலம் பற்றிய அனைத்து விவரங்களையும், வரைபடங்களையும் டிஜிட்டல் தளத்தில் உடனடியாகப் பெற முடியும்.அனைத்து நிலப் பதிவேடுகளையும் மின்னணு முறையில் பராமரிக்க இந்தத் திட்டம் உதவும்.
நிர்வாகத்தை எளிதாக்குதல், நகல் எடுப்பதைத் தவிர்த்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் உண்மையான நிலப் பதிவுகளை பொதுமக்கள் அணுகுவதை உறுதி செய்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். இந்தத் திட்டம் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் சண்டிகரில் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
25-30 துறைகள் ஒருங்கிணைப்பு
'நில அடுக்கு' திட்டத்தை செயல்படுத்த, பதிவுத்துறை, நகராட்சி நிர்வாகம், நகர் ஊரமைப்புத்துறை உள்ளிட்ட 25 முதல் 30 துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காரைக்குடியில் ஏற்கனவே நடைபெற்று வரும் "NAKSHA" (National Geospatial Knowledge-Based Land Survey of Urban Habitations) பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் அடுத்த 6 மாதங்களில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் நாடுமுழுவதும் விரிவுபடுத்தப்படும்.
'ஒரு பொத்தான்' தீர்வு
"ஒரே ஓர் பொத்தானை அழுத்தினால், துறைகளும் பொதுமக்களும் ஒரு நிலம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சரிபார்க்க முடியும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்" என்று சொக்கலிங்கம் கூறினார். இந்தத் திட்டம், நிலம் வாங்குபவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்த்து, துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கு உதவும். இது 'வாங்குபவர் ஜாக்கிரதை' என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் என்றார்.
இந்தக் கூட்டத்தில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் (மறு நில அளவை, சென்னை) வெங்கடேசன், நில அளவை உதவி இயக்குநர் பழனிகார்த்திகைகுமரன், காரைக்குடி மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாவட்ட பதிவாளர்கள் இயலரசி (காரைக்குடி), கவிநிலவு (சிவகங்கை), காரைக்குடி வட்டாட்சியர் ராஜா உட்பட பல துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.