சென்னை, ஆக 24–
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாட்டில், ரோட்டரி சங்கத்தின் சார்பில் 100 பெண்களுக்கு இளஞ்சிகப்பு நிற (பிங்க்) ஆட்டோக்களை வழங்கினார். இந்த மாநாட்டில் பல ஆண்டுகளாக சிறந்த சேவைகளை புரிந்த ரோட்டரி சங்க மூத்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பள்ளிக் கல்வித்துறையின் நம்ம ஊர் - நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் 1,000 அரசு பள்ளிகளில் தண்ணீர் சுத்தம் மற்றும் சுகாதார வசதிகளை மேற்கொள்வதையும், பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ‘‘கேர் 4 ஸ்கூல்’’ அமைப்பதற்கு பள்ளிக் கல்வித் துறையுடன், ரோட்டரி சங்கத்தினர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்கள்.
பல நாடுகளிலிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்ற ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:–
இந்த நிகழ்ச்சியில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சமூக நலத்திட்டங்களை, ரோட்டரி சங்கம் தொடங்கி வைப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அதேபோல மகளிருக்காக 100 பிங்க் ஆட்டோக்களை வழங்கியிருக்கிறோம். இது மகளிர் முன்னேற்றத்திற்கான சிறந்ததொரு முன்னுதாரணமாகும்.
மேலும் 250 புதிய ரோட்டரி சங்கங்கள் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சாதனை மட்டுமல்ல சமூக முன்னேற்றத்தில் ரோட்டரி சங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
லீட்-25 போன்ற சந்திப்புகள் உண்மையான தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. தலைமைத்துவம் என்பது வெறும் அதிகாரம், பதவியை மட்டும் கொண்டிருப்பதல்ல. அது சேவை, தியாகம், பொறுப்பையும் ஏற்று செயல்படுவதாகும்.
திராவிட மாடல் அரசும் அதே விழுமியங்களுடன், சமூக நீதி மற்றும் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை நோக்கிப் பயணித்து வருகிறது என்பதை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ரோட்டரி சங்கத்துடன் இணைந்து செயல்படுவதால், சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சர்வதேச ரோட்டரி தலைவர் பிரான்செஸ்கோ அரெஸ்ஸோ, ஏகேஎஸ் ரோட்டரியன்கள் எம். முருகானந்தம், வினோத் சரோகி, ஃப்ளைட் லெப்டினன்ட் கே.பி. நாகேஷ், லீட்ஸ்- 25 மாநாட்டின் தலைவர் ஜான் டேனியல், மாநாட்டின் செயலாளர் குமரன், சந்திரகுமார், ரகுராமன், கல்யாண் பானர்ஜி, சார்ல்ஸ் ஃபவுண்டேஷன் இயக்குநர் சார்ல்ஸ் மார்டின், பிங்க் ஆட்டோ திட்டத் தலைவர் ரோ. சிவா இளங்கோவன் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.