"மறந்து வாழ்... மறந்து வாழ்"

"மறந்து வாழ்... மறந்து வாழ்"


இரவு நெருங்க நெருங்க பயத்தில் உட்கார்ந்திருந்தான் சந்திரன். "கடவுளே... இன்னிக்கு ராத்திரியை எப்படிக் கடக்கப் போகிறேனோ?"


அவன் மனைவி மல்லிகா ஆறு மாதங்களுக்கு முன்னால் விஷக் காய்ச்சலில் மரணித்த பின், அந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வரும் சந்திரனை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பலர் வற்புறுத்தியும் மறுத்து விட்டான்.


 "மாப்ள... நாங்களே சொல்றோம்... நீங்க வேறொரு பெண்ணைக் கட்டிக்கங்க" என்று மல்லிகாவின் பெற்றோர் கேட்டுக் கொண்டும் அவன் ஏற்கவில்லை.


பல வழிகளில் அவன் மனதை மாற்ற, பலர் முயற்சித்தும் அவன் கடுகளவும் அசையவில்லை.


இரவு. 12.00 மணி.


வெளியில் வேகமாய் வீசும் காற்று, வெண்டிலேட்டருக்குள் புகுந்து உள்ளே வரும் போது, மல்லிகாவின் குரலில் "இறந்து வா... இறந்து வா" என்று சந்திரனுக்கு அழைப்பு விடுப்பது போலிருக்க, இரவெல்லாம் தூங்காமலே கிடந்தான்.


 "சந்தேகமேயில்லை... மல்லிகாதான் என்னைக் கூப்பிடறா... என்னை மறுமணம் செய்து கொள்ளாமல் தடுத்து தன்னோடு அழைத்துக் கொள்ள விரும்புகிறாள்!... போய் விடுவோமா... போய் விடுவோமா... செத்துப் போயிடலாமா?"


தாறுமாறாய்ச் சிந்தித்தபடி புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தவன் அவனையுமறியாமல் உறங்கிப் போனான்.


மறுநாள் தன் நிலைமையை அவன் ஊழியன் ராஜாவிடம் சொல்ல, அமைதியாய்க் கேட்டு முடித்த ராஜா, "சரி ஒரு ரெண்டு நாளைக்கு நான் உன் கூட வந்து தங்கறேன்" என்றான். மனதிற்குள், "பாவம்... மனதளவில் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கான்... இதை சைக்காலஜிகல் முறைலதான் சரி பண்ணனும்" நினைத்துக் கொண்டான்.


இரவு 12.00.


காற்று வீசத் தொடங்கியதும் வெண்டிலேட்டர் வழியே காற்றின் ஓசை விஸிலடிப்பது போல் கேட்டது.


"கேட்குதா... கேட்குதா... மல்லிகா என்னை "இறந்து வா... இறந்து வா"ன்னு கூப்பிடறது கேட்குதா?" பதறினான் சந்திரன்.


அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்த ராஜா, "நீ தப்பா நெனச்சிட்டே... உண்மையில் அந்தக் குரல் என்ன சொல்லுது தெரியுமா?... " இறந்து வா... இறந்து வா"ன்னு சொல்லலை... "மறந்து வாழ்... மறந்து வாழ்"ன்னு சொல்லுது" என்றான்.


 "அப்படின்னா?"


 "என்னை மறந்திட்டு இன்னொரு பெண்ணைக் கட்டிக்கிட்டு வாழ்... வாழ்"ன்னு சொல்லுது மல்லிகாவோட ஆவி"


"நெஜம்மாவா?"


"நீ சரின்னு சொன்னாத்தான் அவளோட ஆத்மா சாந்தியடையும்... இந்த காற்றோட சத்தமும் நிற்கும்"


ஒரு நெடிய யோசனைக்குப் பின், சம்மதித்தான் சந்திரன்.


மறுநாள் சந்திரன் ஆபீஸிலிருந்து கிளம்பும் முன்னே, அவனிடம் சாவியை வாங்கிக் கொண்டு , அவன் வீட்டிற்கு வந்த ராஜா வெண்டிலேட்டரின் ஓரங்களில் இருந்த துவாரங்களை கெட்டியான அட்டைகளைச் செருகி அடைத்தான்.


அன்று இரவு வெளியில் காற்றடித்தும் வெண்டிலேட்டர் வழியே ஓசை வராததால், மல்லிகாவின் ஆன்மா சாந்தியடைந்து விட்டதாய் நம்பினான் சந்திரன்.


அதே நேரம்,கண்ணை மூடித் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தான் ராஜா.


(முற்றும்)



முகில் தினகரன், 

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%