வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கான வங்கி கடனுக்கு 3 சதம் வட்டி மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கான வங்கி கடனுக்கு 3 சதம் வட்டி மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், ஆக. 9 –


உழவர் சந்தையிலிருந்து உலக சந்தை வரை வேளாண் துறையின் தடையற்ற வளர்ச்சிக்காக ஒன்றிய, மாநில அரசுகள் நீண்டகாலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில், அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்புகளை குறைத்து, விநியோகத் தொடர்சங்கிலியை பலப்படுத்தும் நோக்கில், வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்காக பெறப்படும் வங்கிக் கடனுடன் கூடிய மானியத் திட்டங்களுக்கு, வேளாண் உட்கட்டமைப்புநிதி மூலம் ஆண்டுக்கு அதிகபட்சம் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.


தமிழ்நாட்டில் 2020–2021 முதல் 2032–2033 வரை 13 ஆண்டுகளில் ரூ.5,990 கோடி கடன் வழங்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025–2026-ஆம் ஆண்டில் கரூர் மாவட்டத்திற்கு ரூ.78 கோடி இலக்கீடு கிடைத்துள்ளது.


ஒரு தகுதியான நிறுவனம் ஒரே இடம் அல்லது பல இடங்களில் திட்டங்களை செயல்படுத்தினால், மொத்தம் ரூ.2 கோடி வரை கடன் பெற தகுதியுடையது. துவக்க நிறுவனம் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கு அதிகபட்சம் 25 திட்டங்களுக்கு மட்டும் நிதியுதவி வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.2 கோடி வரை பெறப்படும் கடனுக்கு 7 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.


அறுவடைக்குப்பின் மேலாண்மை, மின் சந்தையுடன் கூடிய விநியோகத் தொடர்பு, சேமிப்பு கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிப்பு, குளிர்பதன வசதிகள், போக்குவரத்து, முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழுக்க வைக்கும் அறைகள், மின்னணு வணிக மையங்கள், இயற்கை இடுபொருள் உற்பத்தி, நவீன துல்லிய பண்ணைய உட்கட்டமைப்பு, வேளாண் இயந்திர வாடகை மையங்கள், உயர் தொழில்நுட்ப மையங்கள், சூரிய ஒளி மின்மோட்டார் போன்ற பணிகள் மேற்கொள்ளலாம்.


பிஏசிஎஸ், எம்சிஎஸ், எப்பிஓஎஸ், எஸ்எச்ஜிஎஸ், விவசாயிகள், ஜெஎல்ஜிஎஸ், பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண் தொழில்முனைவோர், மத்திய–மாநில அரசு உதவி பெறும் பொது–தனியார் கூட்டுத் திட்டங்கள், தனிநபர் வணிகர்கள், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், மாநில சேமிப்பு கழகங்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.


திட்ட விவரங்களை https://agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து, விருப்பமான வங்கி கிளைக்கு திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக் கலாம். கூடுதல் தகவலுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), கரூர் அலுவலகத்திலும் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%