வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த வங்கி அதிகாரியிடம் விசாரணை!

வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த வங்கி அதிகாரியிடம் விசாரணை!

நத்தம்:

திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன், நத்தம் அருகே கோபால்பட்டியில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி ஓசூரை சேர்ந்த சத்யா (26). திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. கோபால்பட்டி எல்லைநகர் பகுதியில் வசிக்கின்றனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சத்யா (26) கர்ப்பமடைந்தார்.


இந்நிலையில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் எந்தவொரு மருத்துவமனையிலும் பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாக அத்தம் பதியை சந்தித்து மருத்துவமனையில் ஆலோசனைக்கு வருமாறு அறிவுறுத்தினர். அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வந்துள்ளனர்.


நேற்று முன்தினம் சத்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர் சத்யாவை மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸை அனுப்பினர். ஆனால், அவர்கள் வீட்டின் கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டனர். வீட்டின் வெளியே கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையிலான குழுவினர் மற்றும் சாணார்பட்டி சார்பு ஆய்வாளர் பொன் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் மற்றும் போலீஸார் காத்திருந்தனர். ஆம்புலன்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.


இந்நிலையில், கஜேந்திரன் செல்போன் வீடியோ அழைப்பில் யாரிடமோ பேசிக்கொண்டே அவர்கள் கூறிய தகவலின்படி பிரசவம் பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து குழந்தை பிறந்த அழுகுரல் வீட்டினுள் கேட்டுள்ளது. அதன்பிறகே வீட்டின் கதவை கஜேந்திரன் திறந்துள்ளார். உள்ளே சத்யாவுக்கு 3 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்திருந்தது.


இதுகுறித்து திண்டுக்கல் சுகாதாரத் துறை துணை இயக்குநர் செல்வகுமார் கூறியதாவது: மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பது சத்யா மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்த்தினோம். இது தொடர்பாக, கணவர் கஜேந்திரன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போனில் பேசி பிரசவம் பார்க்க உதவியவர் குறித்தும் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்று கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%