ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆட வேண்டுமெனில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி தங்களை மேட்ச் ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பிசிசிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆடிய அற்புத இன்னிங்ஸ்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று விட்டன. இதனையடுத்து இனி ரோஹித், கோலியைப் பற்றி கம்பீர் அண்ட் கோ வாயைத்திறக்காது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த புதிய கெடுபிடியை அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டுமெனில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும்.”- என்பதே பிசிசிஐ-யின் புதிய கட்டளையாகும். மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த பங்களிப்புகளை மனதில் கொண்டாவது அவர்களை மரியாதையுடன் நடத்துமாறு பலதரப்புகளிலிருந்தும் அகார்க்கர்-கம்பீர் அண்ட் கோவுக்கு பலரும் கோரிக்கை விடுத்தவண்ணம் இருக்கின்றனர்.
இதனையடுத்து ரோஹித் சர்மா மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தாம் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலியின் பங்கேற்பு குறித்து இன்னும் தெளிவு இல்லை.
அஜித் அகார்க்கர் கூறுவது என்ன? - “சர்வதேச வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது உள்நாட்டு கிரிக்கெட் ஆடவேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பிறகும் தங்களை கூர்மையாக வைத்துக் கொள்ள அதுவே வழி. என்று நாங்கள் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியுள்ளோம்.” என்று அஜித் அகார்க்கர் தன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதும் ரோஹித் கோலிக்கு வேறு வழியில்லை என்பதை உறுதி செய்துள்ளது.
அதாவது, டெஸ்ட், டி20 வடிவங்களிலிருந்து ஓய்வு பெற்ற இருவரும் தங்களை சர்வதேசப் போட்டிகளுக்கு ஏற்ப தயார் செய்து கொள்வதற்கு உள்நாட்டு கிரிக்கெட் தவிர வேறு மார்க்கமில்லை என்று அஜித் அகார்க்கர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அதே வேளையில் அஜித் அகார்க்கர் இன்னொன்றையும் வலியுறுத்தினார், உள்நாட்டு கிரிக்கெட் அவர்கள் ஆட வேண்டும் என்று கூறுவது எதற்காகவெனில், ஒவ்வொரு சர்வதேசப் போட்டியிலும் அவர்கள் மீது அழுத்தத்தை வைக்குமாறு சோதித்துக் கொண்டிருக்க முடியாது அவர்கள் மூத்த வீரர்கள் என்றார். எனவே அவர்கள் விளையாடத் தொடங்கியதும் அவர்களை மதிப்பிட முடியும், என்கிறார்.
விஜய் ஹசாரே டிராபியில் கோலி விளையாடினால் ஆடவிருக்கும் அவரது டெல்லி அணி ஆந்திராவை முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. மும்பை அணி சிக்கிம் அணியை எதிர்கொள்கிறது.