விக்கிரமாதித்தன் கதைகள்...!!

விக்கிரமாதித்தன் கதைகள்...!!



வாரிசை தேர்ந்தெடுக்க துறவி வைத்த போட்டி...!!




காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது.


சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டு வந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆள வேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான்.


அப்போது இந்நாட்டின் எல்லையிலிருக்கும் ஆசிரமத்தில் ஒரு துறவி, இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத் தந்து, அவர்களை மிகச்சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும் தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினான். அதன் படி மன்னன் வீரபாகுவும், அவன் மந்திரியும் அந்த ஆசிரமம் சென்று தங்களின் எண்ணத்தை அந்த துறவியிடம் கூறினர்.


இதை கேட்ட அந்த துறவி தான் அவர்களுக்கு உதவுவதாக கூறி... தனது ஆசிரமத்தின் மிகச் சிறந்த வீரர்களான ராமன், ஜெயன், கௌதமன் என்ற மூவரை அழைத்து, ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்குமாறும், ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தங்களின் அனுபவத்தை கூற வேண்டும் என்றும் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மூவரும் ஆசிரமத்திற்கு திரும்பினர். அங்கு மன்னன் வீரபாகுவும், அவனது மந்திரியும் அந்த துறவியுடன் இருந்தனர். 


அப்போது ராமன், தான் இந்த ஒரு மாத காலம் வடதிசை நோக்கி பயணித்ததாகவும், அப்போது ஒரு நாட்டின் மன்னனுக்கு எதிராக சில இளைஞர்கள் ஒருவனின் வழிகாட்டுதலின் படி புரட்சியில் ஈடுபட, அக்கூட்டத்தின் தலைவனை தான் அம்பெய்தி கொன்று விட்டதாகவும் கூறினான். 


இப்போது ஜெயன், தான் தென் திசையை நோக்கி பயணித்ததாகவும், அந்த திசையின் பல இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகமிருந்ததால் அங்குள்ள இளைஞர்களுக்கு, தான் வாள் போர் கலையை கற்றுத்தந்து அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள தான் உதவியதாக கூறினான்.


மூன்றாவதாக கௌதமன், தான் கிழக்கு திசையை நோக்கி பயணித்ததாகவும், தனது வீரத்தை காட்டக்கூடியதற்குண்டான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றாலும் வழியில் காட்டின் ஓரத்திலுள்ள ஒரு குளத்தில் ஒரு குட்டி யானை சிக்கி தவித்ததைக் கண்டு, தான் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அந்த குட்டி யானையை மீட்டு அதன் கூட்டத்தில் சேர்த்ததாகவும், பிறகு மக்கள் அனைவருக்கும் பிறருடன் சண்டையிடாமல் வாழ்வதை பற்றி அறிவுரை கூறியதாகவும் கூறினான்.


இதையெல்லாம் கேட்ட வீரபாகுவும், அவன் மந்திரியும் வீரம் நிறைந்த காரியங்கள் செய்த ராமன், ஜெயன் ஆகிய இருவரில் ஒருவரை தங்கள் வாரிசாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தாலும் அந்த துறவியின் கருத்தை கேட்க விரும்பினர்.


சிறிது நேரம் ஆலோசித்த பின்பு கௌதமனை வாரிசாக தேர்ந்தெடுக்கும் படி கூறினார் அந்த துறவி. விக்ரமாதித்தனிடம்... அந்த துறவி கௌதமனை வாரிசாக தேர்ந்தெடுக்க கூறியது ஏன்? என கேட்டது வேதாளம்.


கதையின் கருத்து :


'ராமன், ஜெயன் புரிந்தது வீரமிக்க செயல்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் ஒரு நாட்டை நிர்வகிக்க வெறும் வீரம் மட்டும் போதாது. அம்மக்களிடம் உள்ள ஏற்ற, தாழ்வுகளை நீக்கி அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படுத்தும் திறன் வேண்டும். அது கௌதமனிடம் அதிகமிருந்தது. மேலும் கௌதமனுக்கு வீரத்தை காட்டக்கூடிய சூழ்நிலை தான் அமையவில்லையே தவிர அவன் ஒன்றும் கோழையல்ல. எனவே கௌதமனை வாரிசாக ஏற்கும் படி அந்த துறவி கூறினார்" என விக்ரமாதித்தன் கூறிய பதிலைக் கேட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.


Thanks and regards 

A s Govinda rajan 

 


 : யார் உண்மையான தந்தை?



காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தனிடம் இந்த கதையை வேதாளம் கூறியது.


ஜெயநகர் என்ற நாட்டில் மாயன் என்ற வாலிபன் இருந்தான். இவன் திருடுவதை தனது தொழிலாக கொண்டிருந்தான். அப்படி ஒரு முறை இரவு நேரத்தில் திருடுவதற்கு அந்த ஊரில் சுற்றி திரிந்தபோது, இரவு பணியிலிருந்த காவலர்கள் அவனை பார்த்து பிடிப்பதற்காக துரத்தினர். அவர்களிடம் இருந்து ஓடி தப்பிக்க அருகிலிருந்த வீட்டின் ஒரு அறையில் புகுந்து ஒளிந்து கொண்டான் மாயன். அப்போது அந்த அறையிலிருந்த சுகந்தி என்ற திருமணமாகாத இளம் பெண் அவனை பார்த்து விட்டாள். ஆனாலும் வெளியிலிருந்த காவலர்களிடம் மாயனை அவள் காட்டிக்கொடுக்கவில்லை. இதனால் சுகந்தி மீது மாயனுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. சுகந்தியும் ஏதோ ஒரு காரணத்திற்காக அவனிடம் ஈர்க்கப்பட்டாள்.


பிறகு தினமும் அந்த இரவு வேளையில் அவர்களின் சந்திப்பு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் மிக நெருங்கி பழகிய காரணத்தால் சுகந்தி கர்ப்பமடைந்தாள். இதை அறிந்த மாயனும் அவளை கூடிய விரைவில் தாம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தான். ஆனால் எதிர்பாராத விதமாக மாயன் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் சமயம், காவலர்கள் அவனை கைது செய்ய முயன்றபோது அவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்து போனான். இதைக் கேள்விப்பட்ட சுகந்தி மிகுந்த அதிர்ச்சியடைந்தாள். அதே நேரத்தில் அவளுக்கு, ஜெயன் என்பவனுடன் திருமணம் செய்ய அவளது பெற்றோர்கள் எண்ணினர். சுகந்தியும் தனது கர்ப்பத்தை மறைத்து ஜெயனை திருமணம் செய்து கொண்டாள். பின் பத்து மாதத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு, அது ஜெயனுக்கும், தனக்கும் பிறந்த குழந்தை தான் என ஜெயன் உட்பட அனைவரையும் நம்பவைத்துவிட்டாள்.


அந்த ஆண் குழந்தைக்கு நகுலன் என்று பெயரிட்டு இருவரும் பாசத்துடன் வளர்த்து வந்தனர். சில வருடங்களில் நகுலனின் தந்தை ஜெயன் இறந்தார். இப்போது நன்கு வளர்ந்து இளைஞனாகி விட்ட நகுலன், இறந்துபோன தனது தந்தை ஜெயனுக்கு கங்கை கரையில் திதி கொடுக்கும் பூஜையை செய்து அந்த திதி பிண்டத்தை கங்கை நீரில் விட சென்றபோது, இரண்டு கைகள் நீருக்குள்ளிருந்து தோன்றியது. அதில் ஒன்று ஜெயனுடையது மற்றொன்று மாயனுடையது. இரண்டும், தானே நகுலனுடைய தந்தையென்றும், தனக்கே திதி பிண்டத்தை தருமாறு கேட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நகுலன் தனது தாய் சுகந்தியிடம் இதை பற்றி கூறினான். அப்போது சுகந்தி நகுலனின் உண்மையான தந்தை மாயன் தான் என்ற உண்மையை கூறினாள். இப்போது யாருக்கு இந்த திதி பிண்டத்தை அளிப்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் நகுலன்.



கதையின் கருத்து : 


விக்ரமாதித்தா நகுலன் அந்த பிண்டத்தை யாருக்கு அளிக்க வேண்டும்? எனக் கேட்டது வேதாளம். 'திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே ஒரு பெண்ணை கர்ப்பமாக்கிய தவறை செய்தவன் மாயன். மேலும் நகுலன் பிறக்க காரணமாக மாயன் இருந்தானே தவிர, ஒரு தந்தைக்குண்டான கடமை எதையும் நகுலனுக்கு செய்யவில்லை. அது போல தான் கர்ப்பமடைந்ததை மறைத்து ஜெயனை திருமணம் செய்து, ஒரு மிகப் பெரும் துரோகத்தை ஜெயனுக்கு செய்தாள் நகுலனின் தாய் சுகந்தி. அதே நேரத்தில் நகுலன் தன் மகனென்று கருதி அவனுக்கு சிறந்த தந்தையாக வாழ்ந்து மறைந்தான் ஜெயன். இவை எல்லாவற்றையும் தீர ஆலோசிக்கும் போது ஜெயனே அந்த பிண்டத்தை பெறும் தகுதியுடையவனாகிறான்" என விக்ரமாதித்தன் பதிலளித்த உடன் அந்த வேதாளம் மீண்டும் பறந்து முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

 

Thanks and regards 

A s Govinda rajan 


: அந்த காலத்தில் ஒரு இலவச டாக்டர்...!!



வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல தொடங்கியது...



'விஜய்ப்பூர்" என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் அனைத்து மக்களுக்கும் உதவி செய்து வந்தான். இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர்கள் திருமணம் செய்தால் மாறி விடுவான் என்று நினைத்து 'ரமா" என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.


திருமணம் முடிந்து சில காலம் கழித்து தன் கணவன் ரகுவிடம் நீங்கள் மற்றவர்களுக்கு செய்த உதவியின் மூலம் பயன் அடைந்தார்களா என்பதை அறிந்து வருமாறு கூறினாள். இதை கேட்டு மற்றவர்களிடம் விசாரித்த ரகு அவர்களுக்கு தான் செய்த உதவியினால் எவ்வித பயனும் இல்லை என்பதை அறிந்து வந்து ரமாவிடம் கூறினான். அப்போது ரமா, பிறருக்கு நேர்மையாக உதவுவதற்கு மருத்துவத்தொழிலைக் கற்று, அதன் மூலம் உதவுமாறு கூறினாள்.


அதைக் கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்றார் ரகு. அதற்கு ரமா 'சந்திரநகர்" என்ற ஊரில் வைத்தியநாதன் என்ற மருத்துவரிடம் ஒரு வருடத்திலேயே மருத்துவத்தொழிலை கற்றுக்கொள்ள முடியும் என்று கூறி அவரிடம் சென்று நீங்கள் கற்று கொள்ளுங்கள் என்றாள். அதன்படி ரகுவும் ஒரு வருடத்தில் வைத்திய முறைகளை கற்று தேர்ந்தான். மேலும் ரகு தனது வைத்திய தொழிலை நேர்மையாக செய்யும் பட்சத்தில் தன்னிடமுள்ள அனைத்து வைத்திய குறிப்பு சுவடிகளையும் தருவதாக வைத்தியநாதன் உறுதியளித்தார். பின்பு ஊருக்கு திரும்பிய அவன் தினமும் தனது வீட்டிலேயே மக்கள் அனைவருக்கும் வைத்தியம் பார்க்க தொடங்கினான்.


ஒரு நாள் அந்த நாட்டு மன்னரின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் அரண்மனைக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் படி அரசாங்க வீரர்கள் ரகுவை அழைத்தனர். தான் அரண்மனைக்கு சென்று வைத்தியம் பார்க்கும் நேரத்தில் இங்கிருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதால் மன்னரின் தாயாரை தனது வீட்டிற்கு அழைத்துவந்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி விட்டான்.


இதையெல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்த துறவி ஒருவர் கவனித்து ரகுவை பாராட்டி ஆசீர்வதித்தார். அதோடு சந்திரநகர் சென்று, அவரது குருவிடம் மீதமிருக்கும் மருத்துவ ஓலைகளை வாங்கிவந்து அதன் மூலம் மேலும் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ரகுவிடம் அடிக்கடி கூறி வந்தார்.


ரகுவை அந்த சுவடிகளை வாங்கி வர ஒருநாள் அவன் மனைவி ரமாவே தனக்கு உடல் நலம் சரியில்லாதது போலும், அவள் கணவணான ரகு தரும் எம்மருந்துகளை உட்கொண்டாலும் அவள் குணமாகாத மாதிரி நடித்தாள். இதனால் வேறு வழியின்றி ரகு தனது குருவான வைத்தியநாதனிடம் சென்று ஓலைகளை வாங்கிவந்து, மருந்து தயாரித்து அதை ரமாவிற்கு கொடுத்தான். அவளும் அதை உண்டு குணமடைந்தது போல் நடித்தாள்.


கதையின் கருத்து :


இப்போது வேதாளம் 'விக்ரமாதித்தா ரகுவின் சுயநலத்தைப் பார், பிறருக்கு சிகிச்சை அளிக்க தன் குருவிடம் சுவடிகளை வாங்கச் செல்லாதவன், தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் ஓலைகளைப் பெற்றது சரியா? மேலும் நேர்மையாக மருத்துவ தொழிலை நடத்தினால் ஓலைச்சுவடிகளை தருவதாக கூறிய வைத்தியநாதன் எப்படி ரகுவிற்கு உடனே சுவடிகளைக் கொடுத்தார்?" என கேட்டது.


'ரகு சந்திரநகரில் இருக்கும் தன் குருவிடம் செல்லும் காலத்தில், தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு தான் சிகிச்சை அளிப்பதில் தடங்கல் ஏற்படும் என்றே அவரிடம் செல்ல காலம் தாழ்த்தி வந்தான். பாதிக்கப்பட்டது மனைவி எனின் எந்த கணவனும் அவளுக்காக எத்தகைய காரியத்தையும் செய்வார்கள், இதில் அவனது சுயநலம் ஏதும் இல்லை. மேலும் ரகுவின் நேர்மையை பிறர் மூலம் அறிந்த அவனது குருவும் அவன் கேட்டவுடன், அவனுக்கு ஓலைச்சுவடிகளை கொடுத்து விட்டார்" என்ற விக்ரமாதித்தனின் விடையைக் கேட்டு வேதாளம் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

 

Thanks and regards 

A s Govinda rajan 

 


 இளவரசியை மணக்க மறுத்த இளைஞன்...!!



ஒரு மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தன் சுமந்து சென்று கொண்டிருக்கும்போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை.


ஒரு சமயம் விஜயபுரி என்ற நாட்டில் குருபசேனன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பிறவியிலேயே அவனது கால்களில் சற்று குறைபாடு இருந்ததால் மற்றவர்களைப் போல் அவனால் இயங்க முடியாமல் இருந்தது. மேலும் குருபசேனனின் தாய் அவன் சிறுவனாக இருந்த போதே இறந்துவிட்டதால், அவனது தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 


அப்படி குருபசேனனுக்கு சித்தியாக வாய்த்த அவன் தந்தையின் இரண்டாவது மனைவி, குருபசேனனின் உடல் குறைபாட்டை அடிக்கடி சுட்டிக்காட்டி அவனை இடித்துரைத்து வந்தாள். இதனால் வாழ்க்கையில் ஒரு விரக்தியான நிலையில் இருந்து வந்தான் குருபசேனன்.


அப்போது அந்த நாட்டின் இளவரசியான 'இந்துமதிக்கு" அவளின் தந்தையான அந்த நாட்டின் அரசன் திருமணம் செய்ய பல இளவரசர்கள் கலந்து கொள்ளும் ஒரு சுயம்வரத்தை ஏற்பாடு செய்தான். அப்போது இந்துமதி தாம் ஏற்பாடு செய்யும் போட்டியில் கலந்து தனது வீரத்தை நிரூபிக்கும் நபரை மட்டுமே தாம் திருமணம் செய்யப்போவதாக திட்டவட்டமாக கூறிவிட்டாள். 


அவள் கூறியபடியே ஒரு உயரமான நடைமேடையில் இருபுறமும் கூர்மையான கத்திகளுக்கு மத்தியில் சிறு கீறல் கூட படாமல் நடந்து சென்று சற்று தூரத்திலிருக்கும் மணல்திட்டின் மீது குதிக்கும் நபரை இளவரசி இந்துமதி திருமணம் செய்துகொள்வார் என்று மன்னர் அறிவித்தார். இதைக் கேட்டு பல இளவரசர்கள் அங்கு கூடினாலும் யாரும் அந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.


அப்போது அங்கு வந்திருந்த குருபசேனன், தான் இப்போட்டியில் கலந்து கொள்ள மன்னனிடம் அனுமதி கேட்டான். அவனது உடலின் குறைபாட்டை கண்டு முதலில் தயங்கினாலும் பிறகு அனுமதியளித்தார் மன்னர். அதே நேரத்தில் இந்த போட்டியில் ஒருவேளை குருபசேனன் வெற்றி பெற்றால் அவனுக்கு தனது மகளை திருமணம் செய்ய வேண்டி வருமே என கவலையும் கொண்டார் மன்னர். 


அப்போது போட்டியில் கலந்துகொண்ட குருபசேனன், இளவரசியின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் வெற்றி பெற்றான். இதனால் இளவரசி இந்துமதியும் குருபசேனனை மணந்து கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆனால் குருபசேனன் அவளை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டான். 



கதையின் மையக்கருத்து:


'விக்ரமாதித்தா போட்டியில் வெற்றிபெற்ற பின் சாதாரண குடியில் பிறந்த குருபசேனனுக்கு அந்த நாட்டின் இளவரசியையே மணந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியும் அதை ஏன் மறுத்தான்? இதற்கான விடை உனக்கு தெரிந்தால் கூறு" என்றது வேதாளம்.


'குருபசேனன் பல காலமாகவே தனது அங்க ஊனத்தை குறித்து தனது சித்தி குறை கூறியதால் வாழ்வில் மிகவும் நொந்து போயிருந்தான். அப்படிப்பட்டவன் இப்போட்டியை பற்றிக் கேள்விபட்டவுடன் அதில் கலந்து கொண்டு தன்னை போன்ற ஒருவனாலும் எதையும் சாதிக்க முடியும் என்று உலகிற்கு நிரூபிக்க, இப்போட்டியில் தனது உயிரை பற்றி கவலைப்படாமல் கலந்து கொண்டான். அதில் வெற்றி அல்லது தோல்வி பெறுவதைப் பற்றி அவன் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை.


அதே நேரத்தில் போட்டியில் வென்று அந்நாட்டின் இளவரசியே அவனை மணக்க சம்மதம் கூறியும் ஒரு நாட்டிற்கு ஆபத்து நேரும் காலத்தில் அதை எதிர்த்து சமாளிக்கக்கூடிய உடல்தகுதி தனக்கு இல்லை என்ற நியாயமான காரணத்தை கூறி அந்த இளவரசியை திருமணம் செய்ய மறுத்தான் குருபசேனன்" எனும் பதிலை விக்ரமாதித்தன் கூறியவுடன் அந்த வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

 

Thanks and regards 

A s Govinda rajan 



தளபதிக்கு ஒரு தேர்வு...!!

அடர்ந்த காட்டின் வழியே வேதாளத்தை தன் முதுகில் தூக்கி வந்து கொண்டிருந்த விக்கிரமாதித்தனிடம், அந்த வேதாளம் கூறிய கதை இது... 


'ஜனக்பூர்" என்ற நாட்டில் 'தர்மசீலன்" என்ற மன்னன் இருந்தார். தனது படைக்கு புதிய தளபதியை நியமிப்பதற்காக போர்கலைகளில் தேர்ச்சிபெற்ற வீரர்களுக்கு போட்டி வைத்து, அதில் யார் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக வெற்றி பெறுகிறார்களோ அவர்களை படை தளபதியாக நியமிப்பதாக அறிவித்து, போட்டிகளை துவக்கினார். போட்டிகளில் பல வீரர்களும் போட்டியிட்டனர். இறுதியில் அனைத்திலும் பரசுராமன், ரூபசேனன் என்ற இரு வீரர்கள் வெற்றி பெற்றனர். இப்போது மன்னன் இந்த இருவரில் யாரை தளபதியாக நியமிக்கலாம் என்று சற்று யோசித்து, பின்பு தாம் அந்த இரு வீரர்களிடம் மூன்று கேள்விகள் கேட்க போவதாகவும், அதற்கு யார் சரியான விடையளிக்கிறாரோ, அவரை தான் தளபதியாக நியமிக்கப் போவதாகவும் கூறினார்.


அதன்படி அந்த இருவரிடமும் ஒரு 'தெருவில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்"? என்ற முதல் கேள்வியை மன்னன் கேட்டார். 


அப்போது ரூபசேனன் 'பொது இடத்தில் சண்டையிடுவது தவறு, எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து, சிறையிலடைத்து பின்பு அது குறித்து விசாரிப்பேன்" என்றான்...


பரசுராமனோ 'முதலில் சண்டையிடும் அவர்கள் இருவரையும் விளக்கி, அவர்கள் சண்டையிடுவதற்கான காரணத்தை அறிந்து, யார் மீது தவறு இருக்கிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்" என்றான்.


இப்போது அம்மன்னன் 'நாட்டில் மன்னனுக்கு எதிராக சிலர் சதி செய்வதாக இருந்தால், உங்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்?" என்ற இரண்டாவது கேள்வியை கேட்டார்.


அப்போது ரூபசேனன் 'தான் சிறப்பான ஒற்றர்களின் மூலம் அவர்களை ஒற்றறிந்து கைது செய்து விசாரிப்பேன்" என்றான். 


பரசுராமனோ 'ஒரு நாட்டில் அம்மன்னருக்கு எதிராக யாரும் தகுந்த காரணமின்றி சதி புரியமாட்டார்கள். முதலில் அதற்கான காரணத்தையறிந்து பிறகு அவர்கள் குற்றம் புரிந்தார்களா, இல்லையா என்பதை அறிந்து அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்றான். 


'மன்னனுடன் நீ காட்டிற்கு செல்லும் போது, திடீரென்று ஒரு சிங்கம் அம்மன்னனின் மீது பாய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வாய்?" என மூன்றாவது கேள்வியை மன்னன் கேட்டார். 


அப்போது ரூபசேனன் 'என் உயிரைக் கொடுத்தாவது மன்னனின் உயிரை காப்பாற்றுவேன்" என்று கூறினான்.


பரசுராமன் 'தான் மன்னனுடன் செல்லும் போது சிங்கம் அவரை தாக்குவதற்கான சூழ்நிலையே ஏற்பட்டிருக்காது" என்றான்.


இருவரின் பதில்களையும் ஏற்றுக்கொண்டு ரூபசேனனை புதிய படை தளபதியாக மன்னன் தர்மசீலன் அறிவித்தார்.


கதையின் மையக்கருத்து:


'விக்ரமாதித்தா அறிவாற்றலில் சிறந்தவனாக இருக்கும் பரசுராமனை விடுத்து, ரூபசேனனை புதிய படை தளபதியாக மன்னன் தர்மசீலன் ஏன் தேர்ந்தெடுத்தார்? எனக் கேட்டது வேதாளம்.


அதற்கு விக்கிரமாதித்தன் 'அறிவாற்றலில் பரசுராமன் நிச்சயம் ரூபசேனனை விட உயர்ந்தவன் தான். ஆனால் தர்மசீலன் தேர்ந்தெடுக்கும் படை தளபதி பதவிக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் மனதிடம் தான் தேவை. அது ரூபசேனனிடம் தான் இருந்தது. மேலும் பரசுராமன் போன்ற சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் அறிவாற்றல் கொண்டவர்கள், மன்னனின் கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து செயலாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள். இவர்கள் எதிர்காலத்தில் அம்மன்னனுக்கு ஆபத்தானவர்களாகவும் மாறக்கூடும். எனவே மன்னரின் கட்டளைகளுக்கு மட்டும் கீழ்ப்படியும் ரூபசேனனை, படைத்தளபதியாக தர்மசீலன் தேர்ந்தெடுத்தது சரியானதே" என்றான். இப்பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

 


 Thanks and regards 

A s Govinda rajan 

Kodambakkam Chennai

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%