அன்பு உள்ளங்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைய ஆனந்த பாஸ்கர் மற்றும் தமிழ்நாடு இ இதழ் வழங்கிய சுவைகள் குறித்து :
நேட்டோ அமைப்பின் தோற்றம், உக்ரைன் - ரஷ்யா போரின் ரிஷி மூலம் பற்றி எனக்கு இப்போதுதான் முழுமையான புரிதல் ஏற்பட்டுள்ளது. ஆனந்த பாஸ்கருக்கு நன்றிகள்.
இந்த போர் குறித்து ஒரு வார்த்தை. ரஷ்ய ராணுவத்தின் கமாண்டர் - இன்- சீப் வ்ளாடிமிர் புடின். அவர் ஒரு சொல் Retreat என்று சொன்னால் போதும். ரஷ்ய ராணுவம் பின்வாங்கும். போர் முடிவுக்கு வரும். சொல்ல மாட்டார். அவர் ஆரம்பத்தில் ஒரு உளவாளி. Spy. அடிப்படையில் மிலிட்டரி மேன். To the core he is bellicose in nature. இது பாயிண்ட் நம்பர் ஒன்.
செலன்ஸ்கி ரஷ்யா வின் தாக்குதல் தொடரும் வரை, ட்ரம்பின் ஆயுத உதவி கிடைக்கும் வரை போரைத் தொடர்வார். க்ரிமியாவும், நேட்டோ இணைவும் அவருக்கு முக்கியம். பாய்ண்ட் நம்பர் டூ.
ஆம் டிவிஸ்ட்டிங் மூலம் ட்ரம்ப் இருவரையும் கட்டுப்படுத்த முடியாது. அடிப்படையில் அவர் ஒரு டிப்பிகல் பிஸ்னஸ் மேன். உலக அமைதியை விட, வர்த்தக வ்யூகமே அவரது இலக்கும், பாணியும். நோபேல் விருது, கச்சா எண்ணெய், தளவாட விற்பனையே அவரது பிரதான அக்கறை. புடின் - ட்ரம்ப் உறவு அகத்தில் வெறுப்பு முகத்தில் சிரிப்பு. உடன்பாடு எப்படி சாத்தியமாகும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.
ராணுவப் பயிற்சியின் விளைவாக மாற்றுத்திறனாளி ஆக நேர்வோரின் நலனில் நீதித்துறை காட்டும் பரிவு போற்றர்க்குரியது.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெரும் முகமாக தளவாட உற்பத்தி ரூபாய் 1.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது தற்சார்பின் அடிப்படையில் நல்ல செய்தி தான். ஆனாலும் போர்த் தளவாடமே தேவை இல்லாத பூமியே புண்ணிய பூமியாக இருக்க முடியும். விரைவில் அந்நிலை உருவாகட்டும்.
இந்தியாவில் தங்கத்தின் உற்பத்தி ஆண்டுக்கு 16 டன்னாகவும், இறக்குமதி 700 - 800 மெட்ரிக் டன்னாகவும் உள்ள நிலையில், ஒடிசாவில் தங்கக் கனிமத்தின் இருப்பு 10 முதல் 20 டன் இருக்கலாம் என்ற செய்தி பருத்தி புடவையாய் காய்த்தது
போல் உள்ளது.
தோசை சுடுவதற்கும், குழந்தை பெறுவதற்கும் ரோபோ என்பது செய்தி. அப்படி என்றால் மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டாமோ? ஓஹோ!
வே. கல்யாண் குமார் அவர்களின் "கண்ணன் தாலாட்டு" சொக்க வைத்த தமிழமுதம். அவரது "அடிமைகளும் விடுதலையும்" ரெட்டை வரிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளன. வரிகளின் இறுதியில் வினாக்குறியோடு முடித்திருக்கும் யுக்தி அருமை சார்.
ஆண்டவனை குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து "கடைசிக் குரல்" கொடுத்துள்ள நறுமுகை அவர்களின் தமிழ் ஆளுமை கவிதையின் உச்சம். அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள்.
சீர்காழி சீதாராமன் அவர்களின் கவிதையும் கருத்தைக் கவர்வதை உணரமுடிகிறது. "எழுதுகோல் அவசரப்படுவதில்லை எழுத்தாளன் சாதனைக்குத் தவிக்கிறான்" என்ற வரியில் உண்மை உறைந்து நிற்கிறது. பாராட்டுக்கள்.
முத்து ஆனந்த் அவர்கள் காதல் கவிதைகளில் மட்டுமல்ல கட்டுரைகளிலும் கலக்க முடியும் என்று காட்டியுள்ளார். ஓனிகோபேஜியா என்ற புதிய பதத்தைக் கற்றுக்கொண்டேன். நகம் கடித்தல் பற்றிய விரிவான தகவல்கள் பயன் மிக்கவை. நன்றிகள் சார்.
பொலிவிழந்த அரண்மனை வீடு சிறுகுருவியின் மாளிகையானது பற்றிய கவிதை சிறப்பு. ஒரு oxymoran சிந்தனையில் கவிதையை முடித்துள்ளார் நெல்லை. வள்ளி அவர்கள். அருமை.
திரு. இரா. ரவி அவர்களின் நூல் விமரிசனம் மொட்டுக்களின் வாசத்தை முகரச் செய்தது. இளம் மாணவர்களின் திறமையும், அவர்களைப் பயிற்றுவித்து வழிகாட்டும் இரா.இரவி அவர்களின் சேவையும் கவனம் பெறுகிறது. அவரது மொழிப்பற்று அவரது தமிழ் குறித்த பற்பல கவிதைகளில் மிளிர்வதை ரசிக்க முடிகிறது. பாராட்டுக்கள் சார்.
சில நாட்களாக நெல்லைக் குரலோன் அவர்களின் எழுத்துத் தாண்டவத்தைக் காணோமே? சார், விரைவில் தமிழ் நடையை நாட்டுக!
இ இதழின் சுவை யைக் கூட்டுக!
இவை தவிர, இராமாயண பிற்பகுதி கதை, பழமொழிகளின் உண்மையான அர்த்தம், சமையலறை டிப்ஸ் என சொல்வதற்கு எவ்வளவோ சுவைகள் உள்ளன. அனைத்தையும் அள்ளிவழங்கும் நமது இ இதழ் குழுமத்தாருக்கு நன்றிகள் சொல்லி நிறைவு செய்கிறேன்.
P. கணபதி
பாளையங்கோட்டை