
புதுடெல்லி, செப். 9–
துணை ஜனாபதி தேர்தலில் வாக்களித்த உடனே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மாநிலத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்களுடன் இந்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்வதற்காகத் டெல்லியிலிருந்து ஹிமாச்சலம் மற்றும் பஞ்சாபிற்குப் புறப்பட உள்ளதாகவும், இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இந்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது என்று பதிவிட்டுள்ளார். வெள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காகப் பிரதமர் மோடி ஹிமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபிற்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹிமாசலத்திற்குச் சென்ற பிறகு, பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் மோடி வான்வழியாக ஆய்வு செய்வார். அவர் குருதாஸ்பூருக்குச் சென்று மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் பஞ்சாப் பாஜக தலைவர் சுனில் ஜாகர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். பிரதமரின் வருகையைத் தொடர்ந்து குருதாஸ்பூரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹிமாசலம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்தது. மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர், 1.84 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?