ரூ. 1 லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! வரலாறு காணாத உச்சம்! தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு

ரூ. 1 லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! வரலாறு காணாத உச்சம்!  தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு


 

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனின் விலை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்து திங்கள்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.


இன்று காலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ. 440 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ. 12,515-க்கும், ஒரு சவரன் ரூ. 1,00,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறக்குறைய சவரன் ரூ. 96,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில் சவரனுக்கு ரூ. 2,560 அதிரடியாக உயர்ந்து ரூ. 98,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.


இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலையும் சவரனுக்கு ரூ. 720 உயர்ந்தது. தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ. 440-ம், கிராமுக்கு ரூ. 55-ம் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 1,00,120 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.


வெள்ளியும் உச்சம்


இதனிடையே, கடந்த வார இறுதி நாளான சனிக்கிழமை, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 210-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை கிராமுக்கு ரூ. 3-ம், பிற்பகல் ரூ. 2-ம் அதிகரித்துள்ளது.


தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ. 215-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பு: 

தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு


தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன

 தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.புதிய ஆண்டிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:–


தங்கத்தின் விலை தினமும் கூடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக உயரக்கூடும். ஒருநாள் கூடினால் மற்றொரு நாள் குறைகிறது. ஆனால் விலை உயர்வுக்கு ஏற்ற அளவில் குறைவதில்லை.ஒட்டுமொத்தமாக பார்த்தால், தற்போது போர் பதற்றம் இல்லாத சூழலிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. பொருளாதார மற்றும் வர்த்தக போரின் காரணமாக உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.


சர்வதேச அளவில் பொருளாதார போட்டி அதிகரித்து வருவதால், மற்ற பொருட்களில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும், லாபகரமாகவும் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.


இதனால் வரும் காலங்களில் தங்கம் பண்டமாற்று பொருளாக மாறவும் வாய்ப்பு உள்ளது.தங்கத்தின் விலை கூடியாலும் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. சுபகாரியங்களுக்கு மக்கள் மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். வாங்கும் அளவு குறைந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்தபோதிலும் மக்களின் தனிநபர் வருமானம் அதிகரித்து பொருளாதாரமும் வளர்ந்து உள்ளது. இதனால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடியுள்ளது.தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.12,500 வரை உயர்ந்து வந்துள்ளதை நான் அறிந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%