ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு

ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு



ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார்.


அமெரிக்கா வந்துள்ள ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு அளிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.


இரண்டாவது முறையாக ட்ரம்ப் அதிபரான பிறகு அவரை, வெள்ளை மாளிகையில் விக்டர் ஓர்பன் சந்திப்பது இதுவே முதல்முறை. ட்ரம்ப்பின் அறிவிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முக்கிய விளைவு என்று ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தடைகளில் இருந்து அமெரிக்கா ஹங்கேரிக்கு முழுமையான மற்றும் வரம்பற்ற விலக்கு அளித்துள்ளது. ஹங்கேரியின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முடிவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.


முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், "நிலத்தால் சூழப்பட்ட நாடு ஹங்கேரி என்பது உங்களுக்குத் தெரியும். கடல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எரிவாயுவுக்கு குழாய்களை நம்பி இருக்கிறார்கள். இதில், பெருமளவு அவர்கள் ரஷ்யாவை நம்பி இருக்கிறார்கள்" என தெரிவித்திருந்தார்.


விக்டர் ஓர்பன் கூறும்போது, "நாங்கள் குழாய் மூலம்தான் எரிவாயுவைப் பெறுகிறோம். சித்தாந்தத்துக்கோ அரசியலுக்கோ இதில் இடம் இல்லை. இது முழுக்க முழுக்க யதார்த்தம் தொடர்புடையது. ஏனெனில், எங்களுக்கு துறைமுகங்கள் கிடையாது" என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%