மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளை திருடுகிறார்கள் - பிஹாரில் ராகுல் குற்றச்சாட்டு
புர்னியா: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹாரின் புர்னியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அதற்காக அவர்களின் முழு முயற்சிகளும் நடந்து வருகின்றன. பிஹார் இளைஞர்களிடம் நான் ஒன்றை சொல்கிறேன், பிஹாரின் ஜென் ஸி தலைமுறையினரிடமும் நான் சொல்கிறேன், வாக்குச் சாவடியில் விழிப்புடன் இருப்பது உங்கள் பொறுப்பு, இதனை நடக்க விடாதீர்கள். அவர்கள் உங்கள் எதிர்காலத்தைத் திருட முயற்சிக்கிறார்கள், அதனால்தான் அவர்கள் வாக்குகளைத் திருடுகிறார்கள்” என்றார்
முன்னதாக, கிஷன்கஞ்சில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு பதிலாக, பிஹாரில் தயாரிக்கப்பட்டது என்று மொபைல் போன்களில் எழுதப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த 20 ஆண்டுகளில், நிதிஷ் குமார் எத்தனை உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை அமைத்துள்ளார்?. பிஹாரில் தொழிற்சாலைகளை அமைக்க நிலம் இல்லை என்று அமித் ஷா கூறுகிறார். அவர் மேடையில் பொய் சொல்கிறார். பிஹாரில் நிலத்திற்கு பஞ்சமில்லை. பிஹார் அரசு அதானிக்கு தேவையான அளவுக்கு நிலத்தை வழங்க தயாராக உள்ளது. அதானிக்கு ஏக்கர் ரூ.1 என்ற விலையில் நிலம் வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?