அந்தப் பள்ளியின் மதிய உணவு இடைவேளை.
ஸ்டாஃப் டைனிங் ஹாலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த ஆசிரியர்கள் அனைவரும் ஒரே விஷயம் குறித்து வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்.
அது வேறொன்றுமில்லை. சமீப காலமாய் அந்தப் பள்ளி மாணவர்கள் மத்தியில் பரவியிருந்த மொபைல் போன் மோகம் பற்றிய கவலைதான்.
"ஸ்கூலுக்குள்ளார மொபைல் கொண்டு வரக்கூடாது" எவ்வளவுதான் கண்டிஷன் போட்டாலும் எப்படியோ வாட்ச்மேன் கண்ணுல மண்ணைத் தூவிட்டு கொண்டு வந்திடறானுக... கிளாஸ்ல கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்திட்டு சவுண்டைக் கம்மியா வெச்சுப் படம் பார்த்திட்டிருக்கானுக" மிகவும் வருந்தினார் விளையாட்டு ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன்.
"அது மட்டுமில்லை சார்... ஈவினிங் ஸ்கூல் விட்டதும் வீட்டுக் கூடப் போகாம ஆங்காங்கே மரத்தடில உட்கார்ந்து மொபைல்ல ரீல்ஸ் போட்டுட்டிருக்கானுக... இப்படியே போனா இனி நம்ம ஸ்கூலோட கல்வித் தரம் கீழே போயிடும்" இது அறிவியல் ஆசிரியர்.
நீண்ட நேரம் அமைதி காத்திருந்த வரலாறு ஆசிரியர் வெள்ளிங்கிரி மெல்ல ஆரம்பித்தார். "நீங்கெல்லாம் ஒத்துழைச்சீங்கன்னா... நாம இதை பாஸிட்டிவ்வா மாத்தலாம்"
"எப்படி... எப்படி"
"இண்டர்நெட்டிலோ... அல்லது சோஷியல் மீடியாவிலோ... தாங்கள் படித்த அரிய... புதுமையான... வித்தியாசமான... விஷயங்களை ஒரு தாளில் ஒரு பக்க அளவில் எழுதி... அதற்கென்று வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடணும்... அதில் சிறப்பான மூன்று பதிவுகளை எடுத்து அதை ஸ்கூல் நோட்டீஸ் போர்டில் வைத்து அதை எழுதியவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசுன்னு அறிவிப்பு தரலாம்... நிச்சயம் பசங்க நெட்டுக்குள்ளார பூந்து நல்ல விஷயங்களைத் தேடுவாங்க!"
"பரிசுத் தொகையை பள்ளி நிர்வாகம் கொடுக்குமா?" தமிழாசிரியர் சந்தேகத்தைக் கிளப்ப,
"நோ ப்ராப்ளம்... நானே என் சம்பளப் பணத்திலிருந்து தர்றேன்!"
இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வந்த போது, ஆரம்பத்தில் சற்று மந்தமாகத்தான் இருந்தது. முதல் இரண்டு மாதங்கள் பரிசு பெற்ற மாணவர்களைப் பார்த்து ஊக்கமான மற்ற மாணவர்கள் தாங்களும் இண்டர்நெட்டிற்கு புகுந்து தேட ஆரம்பிக்க,
அதற்குப் பிறகு அப்பள்ளியில் எந்த மாணவனும் சமூக வலை தளத்தின் மோசமான, சினிமா மற்றும் அரசியல் சம்மந்தப்பட்ட பகுதிகளுக்குள் புதையாமல் பண்பட்டுப் போயினர்.
ஆண்டின் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பதிவுகளும் பள்ளியின் சார்பில் புத்தகமாக அச்சிடப்பட, அந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகத்திற்கான அரசு விருதும், ரூபாய் இருபத்தைந்தாயிரமும் அப்புத்தகத்திற்கு வழங்கப்பட்டது.
பள்ளி நிர்வாகமும், மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் அத்தொகையை வெள்ளிங்கிரி ஆசிரியருக்கே அவரது பணி ஓய்வு நாளன்று வழங்கத் தீர்மானித்தனர்.
ஆனால், அதை வாங்க மறுத்த வெள்ளிங்கிரி ஆசிரியர், "இத்தொகையை நான் இந்தப் பள்ளியின் நூலகத்திற்கு இன்னும் பல கம்ப்யூட்டர் புத்தகங்களை வாங்குவதற்காக...நன்கொடையாக வழங்குகிறேன்." என்று சொல்லி முடிக்க முடிக்க எழுந்த கைதட்டல் ஓசை விண்ணை எட்டியது.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்