முதலமைச்சரை எப்படி வேண்டுமானாலும் பேசுவதா? விஜய்யின் தரம் தாழ்ந்த செயல்: அமைச்சர் நேரு கண்டனம்
சென்னை, ஆக. 22–
40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி விஜய் பேசியது தரம் தாழ்ந்த செயல். அவரது தராதரம் அவ்வளவு தான் என்று அமைச்சர் நேரு காட்டமாக பதிலடி கொடுத்தார்.
தேர்தலின் போது அவருக்கு பதில் சொல்வோம் என்றும் அமைச்சர் கூறினார்.
நேற்று மதுரை பாரபத்தியில் நடந்த த.வெ.க.வின் 2வது மாநாட்டில் அந்த கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசினார்.
அப்போது பா.ஜ.க. எங்களது கொள்கை எதிரி; தி.மு.க. எங்களது அரசியல் எதிரி. 2026 தேர்தலில் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று கூறியிருந்தார்.
நேற்று மதுரையில் நடந்த தவெக 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி அதற்கு மக்கள் இல்லை என்று அளித்த பதில் உங்களுக்கு கேட்கிறதா ‘அங்கிள் ஸ்டாலின்’ என்று பேசினார்
இதற்கு அமைச்சர் கே.என்.நேரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:–
அவரது தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார். நேற்று அரசியலுக்குவந்துவிட்டு அவரை அப்படி சொல்வது தரம் தாழ்ந்த செயல். மக்கள் நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் நல்ல பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றமில்லை. 10 பேர், 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக மாநில முதலமைச்சரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எவ்வாறு சரியாக இருக்கும் என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி
தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? எப்படி ஓட்டு போடுவார்கள்? என்று நேற்றையதினம் தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி தந்துள்ளார்.
அவர் கூறுகையில், தமிழக வெற்றி கழக மாநாட்டை பொருத்தவரை அதை அரசியல் மாநாடாக பார்க்கவில்லை. ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டமாகத்தான் பார்க்கிறேன். அவர் பேச்சில் முதிர்ச்சியற்ற தன்மையை பார்க்கிறேன். அவர் கொள்கை எதிரி பாஜக என்கிறார். ஆனால், அவர் கொள்கை எது என்று இதுவரை சொல்லவில்லை. அதில் தெளிவும் இல்லை. கச்சத்தீவைப் பற்றி பேசிய விஜய் காங்கிரஸ் பற்றி பேச ஏன் மறுக்கிறார்? மோடி இல்லையென்றால், விஜய்க்கு தடுப்பூசி கூட கிடைத்திருக்காது. படத்தை பார்த்த ஜோரில் எல்லோரும் பார்த்தார்கள், கைதட்டினார்கள்.
தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டியது இல்லை. தண்ணீரில் தாமரை மலரும். தம்பி விஜய் இன்னும் அரசியல் தலைவராக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சரத்குமார் காட்டம்
தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார் கூறியதாவது:– மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை. பாசிசம் என்றால் அவருக்கு என்ன என்று தெரியுமா? என்று தெரியவில்லை. 24ம் தேதி விலாவாரியாக கள்ளக்குறிச்சியில் நான் பேசுகிறேன்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும். என்ன பேசுகிறோம், எதை பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று பேச்சில் கவனத்துடன் பேச வேண்டும். நடிகர் விஜய் கொள்கை ரீதியாக பேச வேண்டும்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.