மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு
மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அலைச்சறுக்கு அணி வீரர், வீராங்கனைகள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படம் :எல்.சீனிவாசன்
சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியை தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து ரூ.3.30 கோடி செலவில் நடத்துகிறது. இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், கொரியா, குவைத், லெபனான், சவுதி அரேபியா, சீன தைபே, உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இவர்கள் ஷார்ட்போர்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள். ஓபன் பிரிவில் ஆடவர், மகளிர், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிரம் பதக்கங்கள் வழங்கப்படும். இந்தத் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இறுதி தகுதி சுற்று போட்டியாக அமைந்துள்ளது. மேலும் ஷார்ட்போர்டு பிரிவில் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனை 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் இந்திய அலைச்சறுக்கு சங்கத்தின் தலைவர் அருண் வாசு, தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கத்தின் துணைத்தலைவர் வீரபாகு மற்றும் எஸ்டிஏடி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்திய அணி விவரம்: ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணியில் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 8 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஸ்ரீகாந்த், கிஷோர் குமார், கமலி மூர்த்தி, சிருஷ்டி செல்வம், தயின் அருண், ஹரிஷ், பிரகலாத் ஸ்ரீராம், தமயந்தி ஸ்ரீராம் (தமிழ்நாடு), ரமேஷ் புதிகால் (கேரளா), சுகர் சாந்தி பனாரஸ் (கோவா), ஆத்யா சிங், சான்வி ஹெக்டே (கர்நாடகா).