பிராட்வேக்கு மாற்றாக விரைவில் தற்காலிக பேருந்து நிலையங்கள்” - அமைச்சர் சேகர்பாபு தகவல்

பிராட்வேக்கு மாற்றாக விரைவில் தற்காலிக பேருந்து நிலையங்கள்” - அமைச்சர் சேகர்பாபு தகவல்

இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் நல்வழிகாட்டுதலின்படி இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் 5-வது மண்டல அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர் பாபு தலைமையில் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து எம்டிசி பேருந்துகள் இயக்குவது தொடர்பாகவும், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்குவது தொடர்பாகவும் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்க சாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் பணிகள் துவங்கவுள்ளதால், தற்காலிக பேருந்து நிலையத்திற்கான மாற்று இடங்களை தேர்வு செய்ய அரசு உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலைத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “75 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த பிராட்வே பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர், தொகுதி சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, மல்டிலெவல் கார் பார்க்கிங்காக மாற்றுவோம் என உறுதி அளித்திருந்தார். யாரும் எதிர்பார்க்க முடியாத வகையில், ரூ.870 கோடி மதிப்பீட்டில், பிராட்வே பேருந்து நிலையம் அனைத்து நவீன வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட இருக்கிறது.


பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்த கட்டிடங்கள் தற்போது இடிக்கப்படும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 800-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் இந்தப் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பயணிகள் சவுகரியமாக பயணிக்க இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களாக ராயபுரம் கிளைவ் பேக்டரி அருகிலுள்ள இடத்திலும் மற்றும் தீவுத்திடல் என இரண்டு இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வள்ளலார் பேருந்து நிலையமும் தமிழக முதல்வர் தலைமையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட இருக்கிறது. அங்கே தினசரி சுமார் 400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் தொடங்கும்போது, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க, மாநகராட்சி 5-வது மண்டல அலுவலகம் எதிரில் உள்ள 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடம் மற்றும் டான்சிக்கு சொந்தமான 1.50 ஏக்கர் பரப்பளவில் உள்ள மற்றொரு இடம், இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அந்த இடங்களில் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%