பான் மசாலா மீதான கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருவாயில் மாநிலங்களுக்கு பங்கு வழங்கப்படும்

பான் மசாலா மீதான கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருவாயில் மாநிலங்களுக்கு பங்கு வழங்கப்படும்



பான் மசாலா மீதான கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருவாயில் மாநிலங்களுக்கு பங்கு வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.


புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்கள் கடந்த 1-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.


இதில் பான் மசாலா போன்ற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா நேற்று மக்களவையில் விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


விவாதத்தை தொடங்கி வைத்து நிதி மந்திரி நிர்மலா சீதராமன் பேசும்போது கூறியதாவது:-


பான் மசாலாவுக்கு கலால் வரி விதிக்க முடியாத நிலையில், பான் மசாலா உற்பத்திக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நுகர்வுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து, அரசு ஒரு தனி செஸ் மசோதாவைக் கொண்டு வருகிறது.பாவப்பொருட்கள் என்ற முறையில் பான் மசாலா அலகுகளின் உற்பத்தி திறனின் மீது வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பதன் மூலம் இந்த பொருட்களின் நுகர்வு குறையும் என எதிர்பார்க்கிறோம்.


அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி விதிக்கப்படாது.


பான் மசாலா மீது விதிக்கப்படும் இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணர்வு அல்லது பிற சுகாதாரம் சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாநிலங்களுக்கு பகிரப்படும்.


பான் மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதற்கு மேல் பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.


இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


புகையிலை பொருட்களுக்கு


கூடுதல் வரி


புகையிலை பொருட்களுக்கு புதிய கலால் வரி விதிக்க வகை செய்யும் மத்திய கலால் வரி திருத்த மசோதா கடந்த 1-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது நேற்று முன்தினம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


இந்த மசோதா மீது நேற்று மாநிலங்களவையில் விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.


அப்போது அவர் கூறுகையில், ‘புகையிலை விவசாயிகள் வேறு பணப்பயிர்களை விளைவிக்க ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இதை ஏற்கனவே செய்துள்ளன. இந்த மாநிலங்களில் 1 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் புகையிலையில் இருந்து வேறு பயிர்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன’ என தெரிவித்தார்.


புகையிலை பொருட்கள் 40 சதவீத ஜி.எஸ்.டி. பிரிவின் கீழ் இருக்கும் எனக்கூறிய நிர்மலா சீதாராமன், அத்துடன் கூடுதலாக கலால் வரியும் விதிக்கப்படும் என்றும் கூறினார்.


பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%