பழனிசாமி இப்போது உத்தமர் போல வேஷம் போடுகிறார்!” - கருணாஸ் சாடல்
Sep 09 2025
17

எக்கு கோட்டையாக இருந்த அதிமுகவை மட்கிய கோட்டையாக மாற்றியவர் பழனிசாமி. அனைத்து தவறுகளும் செய்துவிட்டு உத்தமர் போல் வேஷம் போடுகிறார்” என்று முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரான நடிகர் கருணாஸ் சாடினார்.
சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பழனிசாமி முதல்வராக இருந்தபோது, முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் நான் பேசியதை ஏற்காதவர், தற்போது கபட நாடகமாடுகிறார். நயினார் நாகேந்திரன் புனிதர் அல்ல. அவரும் அரசியல் குட்டையில் ஊறிய மட்டை போலத்தான். முக்குலத்தோர் வாக்குகளை பெறவே அவரை தலைவராக்கியது பாஜக.
செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதை கண்டிக்கிறேன். அவரை நீக்கியதால் கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் உள்ளனர். வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பழனிசாமி வெற்றி பெறுவதே கடினம். தேர்தலில் அரசியல் ஆதாயத்துக்காக பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜகவின் தமிழர் விரோதப் போக்கையும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் அரசியல் சூதாட்டத்தையும் புத்தமாக எழுதி வருகிறேன். அதை முதல்வர் மூலம் வெளியிட உள்ளேன்.
அதிமுகவை எக்கு கோட்டையாக எம்ஜிஆர், ஜெயலலிதா மாற்றினர். அதை தனது சுற்றுப் பயணத்திலேயே மட்கிய கோட்டையாக பழனிசாமி மாற்றி வருகிறார். கூவத்தூரில் பழனிசாமி எப்படி முதல்வர் ஆக்கப்பட்டார் என்ற விவரத்தை வெளியிடுவது அரசியல் நாகரிகம் இல்லை. தேவைப்பட்டால் ஆதாரங்களை வெளியிடுவேன். நம்பிக்கை துரோகம் செய்த பழனிசாமி அதற்கான பலனை அனுபவிப்பார்.
அதிமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்க வேண்டியதில்லை. அதை பழனிசாமியே நிறைவேற்றுவார். அதிமுகவை ஒன்று சேர்த்தாலும் ஆதரவு தர மாட்டேன். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர்தான் ஓபிஎஸ். சசிகலா சிறைக்கு சென்றது யாரால் என்பது அனைவருக்கும் தெரியும்.
அனைத்து தவறுகளும் செய்துவிட்டு, உத்தமர் போல வேஷம் போடுகிறார் பழனிசாமி. அவர் எப்படி தமிழக மக்களுக்கு உண்மையாக இருப்பார் ? குற்றச்சாட்டு இல்லாத நேர்மையான அரசியல்வாதிகள் யாரும் இல்லை. மக்கள்தான் நேர்மையானோரை தேர்ந்தெடுக்க வேண்டும். மீண்டும் திமுக ஆட்சி அமையும். அப்போது பழனிசாமி தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் என்றுகூட தெரியாது” என்று அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?