த.வெ.க. மதுரை மாநாட்டில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், 10 பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு

த.வெ.க. மதுரை மாநாட்டில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், 10 பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு

பெரம்பலூர், ஆக. 27–


மதுரை மாநாட்டில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது. தவெக மாநாடு நடைபெறும் திடலில் அன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கொளுத்தும் வெயில் சவாலாக இருந்தபோதும் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கியது. மாநாட்டில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.


இந்த நிலையில் மாநாட்டில் விஜய் நடந்து வருவதற்காக 'ரேம்ப் வாக் மேடை' அமைக்கப்பட்டிருந்தது. பவுன்சர்கள் புடைசூழ விஜய் அதில் நடந்து சென்றபோது தொண்டர்கள் பலரும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் தடுப்பின் மீது ஏறி விஜய்யை நோக்கிச் சென்றனர். அப்போது மேடையின் மீது ஏறிய ஒரு இளைஞரை பவுன்சர் ஒருவர், குண்டுக்கட்டாகத் தூக்கி கீழே வீசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மூங்கில்பாடியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் சரத்குமார் என்ற இளைஞர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், தனது தாயாருடன் நேரில் சென்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது புகாரளித்துள்ளார்.


அந்தப் புகாரில், “தலைவரைப் பார்த்த ஆர்வத்தில் நடைமேடையில் ஏறியவுடன், பவுன்சர்கள் என்னும் குண்டர்கள் என்னை அலேக்காகத் தூக்கி எறிந்தனர். இதில், எனது மார்பக வலது விலா எலும்பு அடிப்பட்டு வலி அதிகமாகவுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். இதுகுறித்து கட்சித் தலைமை பேசுவதாக கூறி தவெக பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினார்கள். ஆனால், உதவிக்குகூட யாரும் என்னை நேரில் வந்து பார்க்காமல் தவறிவிட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


இளைஞரின் புகாரின் அடிப்படையில் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதர குற்றவாளிகளாக 10 பவுன்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


யார் அந்த இளைஞர்


இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள சரத்குமார், “மேடையில் இருந்து பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட நபர் நான் தான். கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே என்னை யாரும் தாக்கவில்லை என்று கூறியிருந்தேன். ஆனால் இனியும் இப்படியொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே தற்போது நான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். பவுன்சர்கள் தூக்கி வீசியதில் எனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் அஜய் என்ற இளைஞர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பவுன்சர்கள் தூக்கி வீசிய இளைஞர் நான் தான். சரத்குமார் என்பவர் பொய்த் தகவலைப் பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%