திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சமத்துவ விருந்து: உதயநிதி பங்கேற்பு

சென்னை, ஆக.16-–
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்த சமத்துவ விருந்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுடன் உணவு அருந்தினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையிலுள்ள முக்கிய கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவு அருந்தினர். அதனைத்தொடர்ந்து துணைமுதலமைச்சர் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், அறநிலைத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சி.பழனி, மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவர் என்.சிற்றரசு, மாநகராட்சி மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் காமராஜ், இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, துணை ஆணையர் சி.நித்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ராயப்பேட்டை, சித்தி புத்தி விநாயகர் கோயிலில் சட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அடையாறு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயிலில், அமைச்சர் கே.என்.நேரு, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் அமைச்சர் இ.பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயிலில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வடபழநி ஆண்டவர் கோயிலில் தங்கம் தென்னரசு, வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?