திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் அமைப்பை புதுடெல்லியில் உருவாக்குவோம்: ஸ்டாலின் உறுதி
சென்னை, ஜூலை 14 -
திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலான அமைப்பை தலைநகர் புதுடெல்லியில் நாம் உருவாக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியிட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நூலை வெளியிட்டார். முதல் பிரதியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். முன்னாள் தலைமைச்செயலாளர் இறையன்பு, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் நூலின் சிறப்பு குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்றைக்கு வைரமுத்துவுக்கு பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பிறந்தநாளுக்கு நாம் தான் பரிசு கொடுக்கவேண்டும். ஆனால் அவர் தான் நமக்கு பிறந்தநாள் பரிசாக இந்த புத்தகத்தை தந்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
திருக்குறளுக்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அதற்கு புது, புது பொருள்களை சொல்லி, உலக மக்கள் எல்லோரும் நல்வழியில் செல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது.
இந்த உரையின் ஆழம் குறள்களை அணுகிய வைரமுத்துவின் திறன்களை எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் ஒவ்வாத சாயம் பூசி மறைப்பதற்கு முயற்சி நடக்கும் இந்த காலக்கட்டத்தில் தன் உரைவாளை எடுத்து உடைவாளாக வீசி இருக்கிறார்.
திராவிட பண்பாட்டை ஆரிய பண்பாடு தகர்க்க முயன்ற காலக்கட்டத்தின் விளிம்பில், தமிழ் மரபு காத்த வள்ளுவன் என்று 2 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை தன் சொற்களாக எடுத்து சொல்லி விட்டார். திருக்குறள் தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும் நமக்கு மட்டும் சொந்தமான நூல் கிடையாது.
நம் இனத்தில்
கவங்கரை விளக்கம்
தந்தை பெரியார் 60 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மாநாட்டை நடத்தினார். திருக்குறளை அச்சிட்டு பரப்பினார். அண்ணா, திருக்குறளை பின்பற்றுபவர்களாக வாழவேண்டும் என்று கூறினார். கருணாநிதி குறள் மனிதர்களாக வாழவேண்டும் என்று சொன்னதுடன் வள்ளுவர் கோட்டத்தை கட்டினார். குமரியில் வள்ளுவருக்கு சிலை அமைத்தார். குறளோவியம் தீட்டினார்.
திருக்குறளை தூக்கிப்பிடித்து இதுதான் நம் இனத்தின் கலங்கரை விளக்கம் என்று வாதாடி பரப்பி வருவதுதான் நாம் திராவிட இயக்கம். அந்த வழித்தடத்தில் வைரமுத்துவும் பாதை மாறாமல் வள்ளுவ தீபத்தை ஏந்தி இருக்கிறார். அவரின் உரையை படித்தபோது, ஒரு கவிதையை படித்த உணர்வை பெற்றவனாக இருக்கிறேன்.
திருக்குறளை இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டிய முயற்சியில் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக திருக்குறளின் சிறப்பை முழுமையாக சொல்லும் மாபெரும் அமைப்பை தலைநகர் புதுடெல்லியில் நாம் உருவாக்கி ஆகவேண்டும். வள்ளுவர் புலவர் மட்டுமல்ல புரட்சியாளர். வள்ளுவர் கவிஞர் மட்டுமல்ல கலகக்காரர். வள்ளுவத்தை பரப்புவது காலத்தின் தேவை.
வள்ளுவத்தை பரப்புவதுடன், எதிரான கருத்துக்கள், எண்ணங்களை அவர் மீது பூச நினைக்கின்ற அடாவடிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் சமுதாயம் எதிர்க்கவேண்டும்.
வள்ளுவருக்கு காவி அடித்து...
சொந்தம் கொண்டாடுவதற்கு ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தினால் நம்முடைய வள்ளுவருக்கு காவி அடித்து திருட பார்க்கிறார்கள், ஏமாற்ற பார்க்கிறார்கள். அதுதான் பொருத்தமாக இருக்கும். தெய்வத்தால் முடியாததை முயற்சி செயல்படுத்தி காட்டக்கூடிய சுயமரியாதை கவியாக விளங்கினார். அனைவருக்கும் சமூக நீதி கவிஞர்.
திருக்குறளை படைத்த திருவள்ளுவரை அபகரிக்க நினைத்தால் அவரின் கருத்துக்களின் வெப்பமே அவர்களை பொசுக்கி விடும்.
இளைய தலைமுறையினரிடம் திருக்குறளின் பெருமையை சேர்க்கவேண்டும். அதற்கான முயற்சியை தி.மு.க. அரசு செய்து வருகிறது. இளைஞர்களுக்கு இருக்கும் தமிழ் பற்றை மேம்படுத்தவேண்டும். மொழி வாழ்ந்தால் இனம் வாழும். மொழி வீழ்ந்தால் இனம் வீழும்.
அரசியல் பண்பாட்டு படையெடுப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள். எத்தகைய படையெடுப்பையும் வெல்லும் திறன் தமிழுக்கு உண்டு. வைரமுத்துவின் இந்த நூல் வாளும், கேடயமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, ‘எங்களுக்கு மிச்சம் இருக்கும் ஒரே ஒரு அடையாளம் திருவள்ளுவர்தான். அவரை பறித்துக்கொண்டு போக விடமாட்டோம். திருவள்ளுவரை விட்டுவிடுங்கள். அவர் தமிழனுக்கு கிடைத்த ஒரே ஒரு அறக்கொடை. இதை இழக்க நாங்கள் தயாராக மாட்டோம் என்றார்.
வேள்வி செய்வது உங்கள் கலாசாரம். யாகம் வளர்த்து, ஆடு, மாடுகளை பலி கொடுப்பது உங்கள் கலாசாரம். தமிழகத்தில் அப்படி கிடையாது. நாங்களும் பலியிடுவோம். யாகம் வளர்த்து அல்ல. அவற்றை மனிதர்களுக்குதான் படைப்போம். இல்லாத சக்திகளுக்கு படைக்க மாட்டோம்’ என்று தெரிவித்தார்.
விழாவில் பேசிய ப.சிதம்பரம், ‘திருக்குறள் உரையை அவை அறிந்து ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்’ என்று கவிஞர் வைரமுத்துவுக்கு புகழாரம் சூட்டினார். இறையன்பு பேசும்போது, ‘திருக்குறள் விண்ணாக இருக்கிறது, நாம் விழிகளாக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம் எம்.பி., தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம், பர்வீன் சுல்தானா உள்பட பலர் கலந்து கொண்டனர்.