டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்’: மத்திய அரசு அறிவிப்பு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்
டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்’ ஆகும். அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கார் வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் செங்கோட்டை அருகே உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பூடான் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை பிரதமர் மோடி டெல்லி வந்தார். டெல்லியில் தரையிறங்கிய உடனேயே அவர் லோக் நாயக் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு சிகிச்சையில் இருந்தவர்களை பார்த்து, நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். சிகிச்சைகள் குறித்தும் கேட்டார். அவர்கள் விரைவில் குணம் அடைய ஆறுதலும் கூறினார்.
2 நிமிட மவுன அஞ்சலி
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் பற்றிய விவரங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய மந்திரிசபை, கடந்த 10-ந் தேதி மாலை டெல்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. அப்பாவி மக்கள் இறந்ததற்காக மந்திரிசபை 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தியது. பின்னர் மந்திரிசபை பின்வரும் தீர்மானத்தையும் ஏற்றுக்கொண்டது.
நவம்பர் 10-ந் தேதி மாலை செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பின் மூலம், தேசவிரோத சக்திகளால் நடத்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை நாடு கண்டுள்ளது. இந்த கார் வெடிப்பில் பலர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மந்திரிசபை தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு தனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
காயம் அடைந்த அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்கி வரும் மருத்துவப்பணியாளர்கள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்களின் உடனடி முயற்சிகளை பாராட்டுகிறது.
அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்த இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை மந்திரிசபை சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கிறது.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மந்திரிசபை மீண்டும் வலியுறுத்துகிறது.
உலகெங்கிலும் உள்ள பல அரசாங்கங்களின் ஒற்றுமை மற்றும் ஆதரவு அறிக்கைகளுக்கு மந்திரிசபை தனது பாராட்டுகளையும் பதிவு செய்தது.
துன்பங்களை எதிர்கொண்டபோது சரியான நேரத்தில் தைரியத்துடனும், இரக்கத்துடனும் செயல்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பை மந்திரிசபை பாராட்டுகிறது. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வு மிகவும் பாராட்டத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மிகவும் அவசரமாகவும், தொழில்முறை ரீதியாகவும் தொடர வேண்டும் என்றும், இதனால் குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் மந்திரிசபை அறிவுறுத்துகிறது. அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்கும், அதன் நீடித்த உறுதிப்பாட்டுக்கும் இசைவாக, அனைத்து இந்தியர்களையும், அவர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் நிலையான உறுதியை மந்திரிசபை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.