செங்கடலில் கேபிள் துண்டிப்பு; இந்தியா உள்பட ஆசியாவில் இணைய சேவை பாதிப்பு
Sep 08 2025
12

நியூயார்க், செப். 7–
செங்கடலில் கேபிள் துண்டிக்கப்பட்டதால் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டை ஒட்டிய செங்கடல் பகுதியில், கடல் வழியே இணையதள சேவைக்காக கேபிள் பதிக்கப்பட்டு உள்ளது. இதன் வழியே பல்வேறு நாடுகளுக்கும் இணையதள இணைப்புக்கான சேவை நடந்து வருகிறது. இந்நிலையில், செங்கடலில் கேபிள் துண்டிக்கப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட ஆசிய பகுதிகள், மேற்காசியாவில் இணைய சேவை இன்று பாதிக்கப்பட்டு உள்ளது. காசா முனை பகுதியில், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
இதில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, செங்கடல் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு கப்பலை அடிக்கடி தாக்கி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், செங்கடலில் தொடர்ச்சியாக கேபிள்கள் துண்டிக்கப்பட்டு அதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு இணையதள இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என இன்டெர்நேட் சேவைக்கான நெட்பிளாக்ஸ் என்ற அமைப்பு தெரிவிக்கின்றது. துபாய், அபுதாபி ஆகிய நாடுகளில் இணைய சேவையின் வேகம் குறைந்துள்ளது என புகார்கள் வந்துள்ளன. மேற்காசியாவில் இந்த பாதிப்பு இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனமும் அதன் வலைதளத்தில் தெரிவித்து உள்ளது. இதற்கு பின்னணியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருக்க கூடும் என கூறப்படுகிறது.
ஆனால், இணையதள சேவைக்கான கேபிள் துண்டிப்பை உறுதி செய்த அவர்கள், இதனை நாங்கள் செய்யவில்லை என மறுத்துள்ளனர். கடந்த காலங்களில் செங்கடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதலை நடத்தினர். இதுவரை 4 கப்பல்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. 8 கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?