சசிகாந்த் செந்தில் எம்.பி.யுடன் ராகுல்காந்தி தொலைபேசியில் பேச்சு

சசிகாந்த் செந்தில் எம்.பி.யுடன் ராகுல்காந்தி தொலைபேசியில் பேச்சு

சென்னை, செப்.1–


உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளுங்கள் என்று சசிகாந்த் செந்தில் எம்.பி.யை ராகுல் தொலைபேசியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.


இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில் போராட்டத்தின்போது திடீரென சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.


ஆஸ்பத்திரியிலும் அவர் போராட்டத்தை தொடர்ந்ததால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து அவர் நேற்று மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், தொடர்ந்து சசிகாந்த் செந்திலை டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும் ஆஸ்பத்திரியின் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


ராகுல் பேச்சு


மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.


அப்போது, பாஜக அரசுக்கு எதிராக இன்னும் பல போராட்டங்கள் நடத்த வேண்டி இருப்பதால் உடல்நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் அறிவுரையை ஏற்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் சசிகாந்த் செந்திலை தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளனர்.


ஆஸ்பத்திரியில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் சசிகாந்த் செந்திலை ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “மருத்துவமனையிலேயே 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுரைப்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இன்று 4வது நாளாக எனது உண்ணாவிரத போராட்டம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்கிறது. மதிமுக கழக செயலாளர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் வந்து ஆதரவு தெரிவித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்” என்று தெரிவித்துள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%