கோவை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,875 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
Aug 29 2025
13

கோவை:
கோவை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,875 கிலோ ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீஸார், ஒருவரைக் கைது செய்தனர். கோவை மாவட்டம் பாலக்காடு வழியாக கேரளாவுக்கு வெடிபொருள் கடத்தப்படுவதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான மதுக்கரை போலீஸார் மற்றும் கோவை மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று அதிகாலை மதுக்கரை எல் அண்டு டி புறவழிச் சாலையில் உள்ள மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த வேனை நிறுத்திச்சோதனையிட்டதில், உள்ளே பெட்டி பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மொத்தம் 75 பெட்டிகளில் 1,875 கிலோ எடை கொண்ட, 15,000 ஜெலட்டின் குச்சிகள் வேனில் இருந்தன. தொடர்ந்து, வேனையும், ஜெலட்டின் குச்சிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், வேன் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், வேனை ஓட்டி வந்தவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஹரிம்பரா பகுதியைச் சேர்ந்த சுபேர்(42) என்பது தெரிந்தது. வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த ஜெலட்டின் குச்சிகளை சேலத்தில் வாங்கி, கோவை வழியாக கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
கேரளாவில் கிணறுகள் தோண்டவும், குவாரிகளில் பயன்படுத்தவும் அவற்றை வாங்கிச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து மதுக்கரை ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் கூறும்போது, “உரிய ஆவணங்களின்றி, சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகிறோம்’’ என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?