கெட் ஃபிட் சென்னை’ நடைப்பயணம், மிதிவண்டி பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு பதக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை, நவ.1–
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மக்களின் உடல் நலம் பேணும் வகையில் நடைபெற்ற ‘கெட் ஃபிட் சென்னை’ (Get Fit Chennai) நடைப்பயணம் (வாக்காத்தான்) மற்றும் மிதிவண்டி பயணத்தில் (சைக்ளோதான்) கலந்து கொண்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
சென்னை மாநகராட்சியின் சார்பில், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் இணைந்து இன்று (1–ந் தேதி) காலை வேளச்சேரி–தரமணி எம்.ஆர்.டி.எஸ் சாலையில் நடைபயணம் மற்றும் மிதிவண்டி பயணம் நடைபெற்றது.
பெருங்குடி ரயில்வே சாலையில் வேளச்சேரி - தாம்பரம் சாலை முதல் எம்.ஜி.ஆர் சாலை வரையில் சென்னை மாநகராட்சியின் சார்பில், ரூ.15.15 கோடி மதிப்பீட்டில் 3.40 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் சாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நகர மக்களிடையே அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து “ஆரோக்கியமான சென்னையை” உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வானது, 3 கிலோ மீட்டர் நடைபயணமாக வேளச்சேரி ரெயில் இணைப்புச் சாலை -சென்னை சில்க்ஸ் அருகில் தொடங்கி பெருங்குடி பேருந்து நிறுத்தம் வழியாக மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தது. மேலும், 6 கிலோமீட்டர் மிதிவண்டி பயணமானது வேளச்சேரி இரயில் இணைப்புச் சாலை- – சென்னை சில்க்ஸ் அருகில் தொடங்கி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி வழியாக மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தது, இதில் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்குபெற்றனர்.
டி–-ஷர்ட், சான்றிதழ்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு டி–-ஷர்ட், சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. மக்களின் நலன் காக்கும் ‘கெட் ஃபிட் சென்னை’ நிகழ்வானது சென்னையில் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர்கள் ஆர்.துரைராஜ் (அடையாறு), எஸ்.வி.ரவிச்சந்திரன் (பெருங்குடி), சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் சுதாகர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.