குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் பதவி பறிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் பதவி பறிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

புதுடெல்லி, ஆக.21-


குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்களின் பதவியை பறிக்க வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.


இந்திய சட்டங்களின்படி பிரதமர் முதல் முதலமைச்சர்கள் வரை யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டாலும் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.


சிறையில் இருந்தாலும் அவர்கள் அந்தந்த பொறுப்புகளில் தொடர்ந்து நீடிக்கலாம். கோர்ட்டில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால்தான் பதவி பறிபோகும்.


குறிப்பாக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போதைய ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த்சோரன் ஆகியோர் சிறையில் இருந்தாலும் பதவியில் தொடர்ந்து நீடித்தனர்.


இதனை தடுக்கும் விதமாக நாடாளு மன்றத்தில் புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


அதுபற்றிய விவரம் வருமாறு:-


நாடாளுமன்ற மக்களவை நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூடியது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்தார்.


யூனியன் பிரதேசங்கள் அரசு (திருத்தம்) மசோதா-–2025. அரசியல் சாசன (130-வது திருத்தம்) மசோதா-–2025. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா-–2025 ஆகிய 3 மசோதாக்களை தாக்கல் செய்தார்.


பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் ஆகியோர் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க கடுமையான குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31-வது நாளில் அவர்கள் பதவி பறிபோக இந்த மசோதாக்கள் வழிவகை செய்கின்றன.


45-வது பிரிவில் திருத்தம்


‘‘யூனியன் பிரதேசங்கள் அரசு-1963 சட்டத்தில், கடுமையான குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்படும் முதல்-மந்திரிகள், மந்திரிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய விதிமுறை இல்லை. எனவே, அவர்களது பதவியை பறிக்க அந்த சட்டத்தின் 45-வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 3 மசோதாக்க ளையும் அமித்ஷா தாக்கல் செய்தார். அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி எம்.பி. பிரேம சந்திரன் ஆகியோர் அறிமுக நிலையிலேயே மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிடத் தொடங்கினர். சிலர் அமித்ஷாவுக்கு முன்பு மசோதாக்களின் நகல்களை கிழித்து எறிந்தனர். அவர்களுக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


தள்ளுமுள்ளு


ஒரு கட்டத்தில், பா.ஜ.க. எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய அமைச்சர்கள் ரவ்நீத்சிங் பிட்டு, கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்கள் அமித்ஷாவை சுற்றி நின்று கொண்டனர். 3 சபை காவலர்கள், அமித்ஷாவை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.


இந்த களேபரத்துக்கு இடையே சபை பிற்பகல் 3 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. சபை ஒத்தி வைப்புக்கு பிறகும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டபடி இருந்தனர்.


சபை மீண்டும் கூடியபோது, அசாதுதின் ஒவைசி, ‘‘மசோதாக்கள், அரசியல் சாசனத்துக்கும், கூட்டாட்சிக்கும் எதிராக உள்ளன. அரசுகளை கவிழ்ப்பதற்காக அரசியல் சாசனம் திருத்தப்படுகிறது’’ என்று ஆவேசமாக பேசினார்.


மணீஷ் திவாரியும் அதே கருத்தை தெரிவித்தார். ‘‘குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி தான் என்று அவர் கூறினார்.


என்.கே.பிரேம சந்திரன், ‘‘சபை நடைமுறைகளுக்கு ஏற்ப மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வில்லை. அவசரகதியில் கொண்டு வரப்பட்டுள்ளன. எம்.பி.க்களுக்கு கூட அனுப்பாமல் இத்தகைய முக்கியமான மசோதாக்களை கொண்டுவர என்ன அவசரம்?’’ என்று கூறினார்.


அவசரகதியில் மசோதாக்கள் கொண்டு வரப்படவில்லை என்று அமித்ஷா மறுப்பு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘‘மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது யோசனைகளை தெரிவிக்கலாம்’’ என்றார். அதைத்தொடர்ந்து, 3 மசோதாக்களை யும் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் பேசுகையில், குஜராத் அமைச்சராக இருந்தபோது அமித்ஷா கைது செய்யப்பட்ட பிரச்சினையை எழுப்பினார். ‘‘அரசியல் ஒழுக்கத்தை பற்றி நீங்கள் பேசலாமா?’’ என்றார்.


அதற்கு அமித்ஷா, ‘‘நான் கைதாவதற்கு முன்பே ராஜினாமா செய்து விட்டேன். கோர்ட்டால் விடுவிக்கப்பட்ட பிறகுதான் மீண்டும் அரசில் சேர்ந்தேன். கடுமையான குற்றச்சாட்டுகளை சந்தித்தபடி, வெட்கமின்றி எங்களால் அரசியல் சாசன பதவியில் நீடிக்க முடியாது’’ என்று பதிலடி கொடுத்தார்.


கூட்டுக்குழுவில், 21 மக்களவை எம்.பி.க்களும், 10 மாநிலங்களவை எம்.பி.க்களும் இடம் பெறுவார்கள். அடுத்த கூட்டத்தொடரின் முதலாவது வாரத்தின் கடைசி நாளுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூட்டுக் குழு கேட்டுக்கொள்ள ப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%