கார்த்திகை பிறந்தது: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம். 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதற்காக, பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் ‘‘சுவாமியே சரணம் ஐயப்பா’’ என்ற சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர்.
இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின. அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம், அண்ணா நகர், ராஜா அண்ணாமலைபுரம், அம்பத்தூர் கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பிரபல ஐயப்பன் கோவில்களிலும் திரளான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்பன் கோவில்கள் மற்றும் பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
விழுப்புரம் பூந்தோட்டம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் திருக்கோவிலில் குருசாமி குப்புசாமி தலைமையில் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் ஐய்யப்பன் கோவிலில் அதிகாலையில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில் ஏழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த சபரிகிரிசனை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வணங்கி குருசாமியிடம் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
விழுப்புரம் அருகே காணை சக்தி விநாயகர் கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் அதிகாலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். கோவில் குருசாமி, அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார் இதுபோல் முத்துமாரியம்மன் கோவில், மருதூர் மாரியம்மன் கோவில், ரெயிலடி விநாயகர், ரங்கநாதன் சாலை சித்தி விநாயகர், காமராஜர் வீதி அமராபதி விநாயகர், பெருமாள் கோவில் வீதியில் உள்ள கோட்டை விநாயகர், மேலத்தெரு மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.