கார்த்திகை தீபத் திருவிழாவில் மலை ஏற அனுமதிக்கப்படுமா? திருவண்ணாமலையில் அமைச்சர்கள் விளக்கம்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுமா என்பதற்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகிற 24 ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா துவங்குகிறது. டிச. 3ம் தேதி மகாதீப பெருவிழா நடக்கிறது. தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், ஆணையாளர் ஸ்ரீதர், எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், வேலூர் சரக டிஐஜி தர்மராஜ், எஸ்பி சுதாகர், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வுக்கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் வேலு கூறியதாவது;
இந்த ஆண்டு தீபத்திருவிழாவில், 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதையொட்டி, கடந்த ஒரு மாதமாக முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடக்கின்றன. தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து வசதி ஆகியவை சிறப்பாக செய்து தரப்படும். இந்த ஆண்டு 4,764 சிறப்பு பேருந்துகள் 11,293 நடைகள் இயக்கப்படும். 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 20 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்படும். மேலும், 90 மருத்துவ குழுக்கள், 45 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும்.
மலை ஏற அனுமதியா?
கடந்த ஆண்டு மலைச்சரிவு ஏற்பட்டதால், மலையேற பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்த ஆண்டும் மழை பெய்து வருகிறது. தீபத் திருநாளன்று மலையின் உறுதித்தன்மை உறுதி செய்த பின்னரே, பக்தர்களை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை சொல்ல முடியும். எனக்கு தெரிந்து இந்த மலை சரிந்ததே இல்லை. கடந்த ஆண்டுதான் முதல்முறையாக சரிந்தது.
அதனால் ஐஐடி நிபுணர்களை ஆய்வுக்கு அழைத்து வந்தேன். அப்போது அவர்கள் ஆய்வு செய்துவிட்டு, எங்கு பார்த்தாலும் மண்ணும், கல்லுமாய் இருக்கிறது.. அதனால் அனுமதிக்க கூடாது என்று என்றார்கள். இதனால் தீபத் திருநாள் அன்று மலையின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.
சேகர்பாபு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், " கடந்த ஆண்டு மலைச்சரிவு ஏற்பட்டதால், தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும், தீபத்தை பாரம்பரியப்படி ஏற்ற வேண்டும் என முதல்வர் தெரிவித்தார். அதன்படி, எவ்வித பாதிப்பும் இல்லாமல் அனைவரும் பாராட்டும்படி விழாவை நடத்தினோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த தீபத்திருவிழா பக்தர்களின் மனம் குளிரும் வகையில் சிறப்பாக நடத்தப்படும். தீபத்திருவிழாவின் போது கோயிலுக்குள் உள்ள இடவசதியின் அடிப்படையில் எவ்வளவு பேரை அனுமதிப்பது என ஆலோசித்து முடிவு செய்யப்படும். தேரோடும் மாட வீதி ரூ.15 கோடியில் கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, 5 தேர்களின் வீதியுலாவும் அதிகபட்சம் 10 மணி நேரத்துக்குள் முடித்துவிட முடியும். நள்ளிரவு வரை தேரோட்டத்தை நீட்டிப்பது பாதுகாப்பானது இல்லை " என்றார்.
மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.