ஜெருசலேம்,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதல் சுமார் 22 மாதங்களாக நீடித்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 62 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் ஆயுதக்குழுவினர் எத்தனை பேர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் உயிரிழந்தவர்களில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே சமயம், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை கடந்த ஜூன் மாதம் முதல் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கியது. அதன்படி இதுவரை 166 பேர் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், அதில் 112 பேர் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதில் பெரும்பாலான பணயக்கைதிகள் போர்நிறுத்த ஒப்பந்தங்களின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மீதம் உள்ள பணயக் கைதிகளை விடுவிக்க, நீடித்த போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் படைகளை திரும்ப பெறுதல் உள்ளிட்ட நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பினர் முன்வைத்துள்ளனர். காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காசாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட சில பகுதிகளில் புதிய ராணுவ நடவடிக்கைகளை தொடங்குவதற்கான திட்டங்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தற்போது பணியாற்றும் 20,000 ராணுவ வீரர்களின் சேவையை நீட்டிக்கவும், மேலும் 60,000 படை வீரர்களை வரவழைக்க இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் இதுவரை தாக்குதல் நடத்தாத பகுதிகளிலும், ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கூறப்படும் பகுதிகளிலும் தங்கள் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலர் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதல் அடுத்த சில நாட்களில் விரிவுபடுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணயக் கைதிகளை மீட்டு, ஹமாஸ் அமைப்பை முழுமையாக வீழ்த்துவதே தங்கள் இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இன்னும் 50 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் அமைப்பினரிடம் பணயக் கைதிகளாக உள்ள நிலையில், அதில் சுமார் 20 பேர் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் கருதுகிறது.
இந்நிலையில், போரை தொடர்ந்து நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருவது குறித்து, பணயக் கைதிகளின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். போரை விரிவாக்கம் செய்வது ஹமாஸ் அமைப்பினர் வசம் இருக்கும் பணயக் கைதிகளின் உயிருக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிப்பது என்ற இலக்கை நிச்சயம் அடைய முடியாது என்றும், அரசியல் காரணங்களுக்காக இந்த போர் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றும் இஸ்ரேல் மக்களிடையே குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.