கர்நாடகாவில் நடந்த கோர விபத்து தனியார் பஸ் மீது லாரி மோதி 20 பேர் உடல் கருகி பலி
ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் இரங்கல்
சித்ரதுர்கா,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் சொகுசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று, 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த கன்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தாண்டி வந்து பஸ் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி, பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக பஸ்சுக்குள் சிக்கி இருந்த பலரால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. விபத்து சம்பவம் தெரியாமல் பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்தவர்களில் 20 பேர் பஸ்சிலேயே உடல் கருகி உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரும் உயிரிழந்தார். படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சொகுசு பஸ்சின் ஓட்டுநரும் நடத்துநரும் உயிர்தப்பினர். முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு தான் இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. “தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு லாரி எங்கள் பஸ்சுக்கு எதிரே வந்தது. அப்போது நான் பஸ்சை 60–70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கினேன். மோதலை தடுக்க முயற்சித்தேன். ஆனால் லாரி வேகமாக வந்த காரணத்தால் அது முடியாமல் போனது என பஸ் ஓட்டுநர் ரபிக் தெரிவித்துள்ளார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார். விழித்திருந்த பல பயணிகள் பஸ்சிலிருந்து குதித்து உயிர்தப்பினர். காயமடைந்தவர்களில் 9 பேர் சிராவுக்கும், 3 பேர் துமகூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய பஸ்சின் பெரும்பாலான பயணிகள் தங்கள் டிக்கெட்டு களை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்ததால் அவர்களது தொலைபேசி எண்கள் பெறப்பட்டுள்ளதை அடுத்து அவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று காவல் துறை அதிகாரி ரவிகாந்த் கவுடா தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:– கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடந்த விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:–
சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில், சித்ரதுர்கா அருகே லாரி (கன்டெய்னர் லாரி) மற்றும் பஸ் மோதிய பயங்கர விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு என் இதயம் குலுங்கியது, இதில் பல பயணிகள் உயிருடன் எரிந்தனர். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வீடு திரும்பியவர்களின் பயணம் இவ்வளவு சோகத்தில் முடிந்தது வருத்தமளிக்கிறது. விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதற்கான காரணம் கண்டறியப்படும். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரின் துயரத்தையும்நான் பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
விபத்து மற்றும் உயிர் இழப்பு குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், "இறந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழக்கூடாது" என்றார்.
முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா மற்றும் மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா ஆகியோர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.