ஐ.பி.எல்.2026: கொல்கத்தா அணியின் கேப்டனாகும் கே.எல்.ராகுல்..?
Aug 28 2025
10

கொல்கத்தா,
ஐ.பி.எல்.தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான (2026) பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன.
இந்த சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய கேப்டன் ரகானே தலைமையில் விளையாடி 8-வது இடத்தை பிடித்து வெளியேறியது. இதனால் அடுத்த சீசனுக்கு முன் அந்த அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படியே, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். மேலும் அந்த அணி நிர்வாகம் டிரேடிங் முறையில் வீரர்களை வாங்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக 2024-ல் நடைபெற்ற ஐ.பி.எல். சீசனில் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட்ட கொல்கத்தா நிர்வாகம் ரகானேவை புதிய கேப்டனாக நியமித்தது. ஆனால் எதிர்பார்த்தபடி கொல்கத்தா அணியால் இந்த சீசனில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக கேப்டன் பதவிக்கு புதிய வீரரை தேடும் பணியில் கொல்கத்தா நிர்வாகம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் முன்னணி வீரரான கே.எல்.ராகுலை பெரிய தொகைக்கு வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அடுத்த சீசனில் ரகானேவுக்கு பதிலாக அவரை கேப்டனாக நியமிக்க கொல்கத்தா நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் ஐ.பி.எல். தொடரில் ரகானேவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
கே.எல்.ராகுல், ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த சீசனில் அவர் 539 ரன்கள் அடித்திருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?