ஏற்றம் தரும் கல்வி கண்களைப் போன்றது

ஏற்றம் தரும் கல்வி கண்களைப் போன்றது



மனித வாழ்வென்பது பலர் போற்றும் படி வாழ்தல் என்றென்றும் சிறப்பு. இத்தகைய ஏற்றத்தினைத் தருவது கல்வியே...எவராலும் மறுக்க முடியாது.


உலகப்பொதுமறை திருக்குறளில் வள்ளுவர் கல்வியின் சிறப்பை மிக அழகாகக் கூறுகிறார். 


கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு

புண்ணுடையர் கல்லாதவர்


கற்றவரின் சிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிற்து. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப் படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.


நம் நாட்டின் ஆண்களும் பெண்களும் கல்வியால் ஒரு சேர எல்லாத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். 


கல்வி என்பது “அள்ள அள்ளக் குறையாது வளம் தரும் அமுத சுரபி” என்ற அட்சய பாத்திரம் என்பதனை அனைவரும் உணர்ந்ததால் தான் இன்று நம் வாழ்க்கையோடு கல்வி இணைந்து விட்டது.


இன்று கல்வி நிலைகளில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்? அத்தனையும் சுவையான, சுகமான மாற்றங்கள். “கல்வியில் மாணவர்களே ஆணிவேர்” என்பதனை உணர்ந்து மாணவர்கள் சுவையாக சுமையின்றி கற்கவும், மனம் ஒன்றி கல்வி செயல்பாடுகளில் ஈடுபடவும், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு ஓடோடி வரவும், தோழமை உணர்வுடன் ஆசிரியருடன் பழகிக் கற்கவும் உள்ள இன்றைய கல்வி முறை, ஒரு வரப் பிரசாதமாகும்.


கற்றலும் இனிது கற்பித்தலும் இனிது என்ற சூழ்நிலை இளந்தளிர்களிடம் ஒரு சிந்தனைப் புரட்சியை உருவாக்கியுள்ளது.  


படிக்கும்போதே தொழிற்கல்வி மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. அவர்களின் சமூகப் பொறுப்புக்கும் அடித்தளமாக அமைகிறது. நாம் யார் ? நமக்குள் இருக்கும் திறன் என்ன ? என்பதை அறிந்து கல்வி கற்போர் வாழ்வில் ஏற்றம் பல கண்டுள்ளனர். மனிதநேயம், வாழ்வியல் சிந்தனைகள், பகுத்தறிவு , பொருளாதார அணுகுமுறை போன்றவற்றை கல்வி நமக்கு வழங்கி வாழ்வில் ஏற்றம் பெறச் செய்கிறது என்பது கண்கூடான உண்மை. 



நாம் கல்வியால் உயர்ந்தால் நம் நாட்டை உயர்த்தலாம் இதனையே கவிஞர் வாலி அவர்கள் தமது திரை இசையில்….


அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பேரைவாங்கலாம்

பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த

நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி


அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப்போல்

அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல்

கவிதைகள் வழங்கு பாரதியைப்போல் 

மேடையில் முழங்கு திரு.வி.க. போல்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த

நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி


கல்வி நமக்கு ஏற்றம் தருவது. முகத்தின் இரண்டு கண்களைப் போன்றது. அறிவுக்கு வெளிச்சம் காட்டுவது. 


கல்வியால் பயனடைந்து 

மற்றவர்க்கு வழிகாட்டலாம் 

ஏழுபிறப்பிலும் உடன்வருவது 

ஏற்றமிகு கல்வி. 



நன்றி, 

அன்பன், 

கா.ந.கல்யாணசுந்தரம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%