இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
புதுடெல்லி / சென்னை: “தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியபோது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவேன். அந்த வேட்கையின் காரணமாகவே தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆகவே, இந்தப் பயணம் எனக்கு புதிது கிடையாது.
பொருளாதார நிலையில் பற்றாக்குறை குறித்து பல தரப்பினரும் விவாதிக்கும் வேளையில், இப்போது இந்திய ஜனநாயகத்தில் இத்தகைய பிரச்சினை எழுந்திருக்கிறது. அதாவது, நமது நாட்டின் ஜனநாயகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருகிறது. இதுபோலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இண்டியா கூட்டணி சார்பில் நானும் போட்டியிடுகிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இது எங்கள் இருவருக்கும் இடையிலான போட்டி கிடையாது. மாறாக, இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி இது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ்காரர். ஆனால், நான் எந்த சித்தாந்தத்தையும் பின்பற்றவில்லை என்றாலும், நான் ஒரு ஜனநாயகவாதி. அதன் அடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுப்பப்படுகின்றன. ‘நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஒருவகையான போராட்டம்’ என்று மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.
அமித் ஷாவுக்கு பதில்: மேலும், “ஒரு வழக்கில் நான் நக்சல் தீவிரவாதத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் நான் எந்தக் கருத்தையும் பதிவு செய்ய விரும்பவில்லை. அந்தத் தீர்ப்பு என்பது என்னுடைய தீர்ப்பு கிடையாது. அது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மொத்தம் 40 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரங்களையும் அமைச்சர் அமித் ஷா படித்து பார்க்க வேண்டுகிறேன்” என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.