ஆம்பூர்:
ஆம்பூர் அருகே விஜய நகர காலத்தைச் சேர்ந்த இரண்டு சதி நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி தலைமையில், ஆங்கிலத் துறைப் பேராசிரியர் வ.மதன்குமார், காணிநிலம் மு.முனுசாமி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வெ.காமினி, சித்த மருத்துவர் கோ. சீனிவாசன் ஆகிய 5 பேர் மேற்கொண்ட களவாய்வில் இரண்டு சதி நடுகற்களைக் கண்டெடுத்துள்ளனர் .
இது குறித்து முனைவர் க.மோகன் காந்தி கூறியது: “திருப்பத்தூர் மாவட்டம் ஏராளமான தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சுவடுகளைத் தன்னகத்தே கொண்ட மாவட்டமாக திகழ்கிறது. தமிழக - ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் திருப்பத்தூர் மாவட்டமும் ஒன்று. சிறு சிறு மலைத் தொடர்களும், அடர் காடுகளும் இப்பகுதியில் இருப்பதால் குறிஞ்சி, முல்லை நில இனக்குழு மக்கள் இம்மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர்.
இனக்குழு அல்லது அரசர்களின் ஏவலின் பேரில் ஏராளமான போர்கள் இப்பகுதியில் நடந்துள்ளன. அந்த வகையில் ஆம்பூர் வட்டத்திலுள்ள காரப்பட்டு என்ற கிராமத்தில் அயினேரி மேடு - கதவாளம் எல்லையில் இரண்டு உடன்கட்டை நடுகற்களை எங்கள் ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளோம்.
வனத்துறைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் இவ்விரண்டு சதி அல்லது உடன்கட்டை நடுகற்களும் உள்ளன. இக்கற்களைக் ‘கன்னிக்கல்’ என்ற பெயரில் இவ்வூர் மக்கள் ஆடிப்பெருக்கின் போது பூஜை செய்து வழிபடுகின்றனர். முதல் நடுகல் கற்திட்டை வடிவில் இரண்டு பக்கங்களிலும் கற்கள் நடப்பட்டுள்ளன. அவை சிதைந்த நிலையில் காட்சித் தருகிறது. மேலே ஒரு பெரிய பலகைக் கல் மூடியிருக்க வேண்டும். அக்கல் காணவில்லை.
4 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்ட அழகான பலகைக் கல்லில் மூன்று உருவங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்நடுகல் விஜயநகர காலத்தைச் சேர்ந்த சிற்ப வடிவில் காட்சி தருகிறது. ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானது. போரிலே வீர மரணமடைந்த வீர மறவன் நடுவணாக நிற்கிறார். வாரி முடிக்கப்பட்ட அழகிய தலைமுடி, காதுகளில் குண்டலங்கள், அழகான ஆடை அலங்காரத்துடன் காட்சி தருகிறார்.
இவ்வீரனின் இடது கையில் நீண்ட வில்லினையும், வலது கையில் பெரிய அம்பினையும் வைத்துள்ளார். இடது புறத்தில் வலது கையை மேலே தூக்கிய வண்ணம் பெண் உருவம் ஒன்றுள்ளது. இடது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையும், இடது கையைத் தொங்கவிட்ட நிலையிலும் இவ்வுருவம் காட்சித் தருகிறது. வீரனின் வலதுபக்கத்தில் பெண் உருவம் ஒன்றுள்ளது. இப்பெண் வலது கையில் கெண்டி எனப்படும் கள் குடம் ஒன்றை வைத்துள்ளார்.
இடது பக்கம் அலங்கரிக்கப்பட்ட கொண்டையும், வலது கையில் கள்குடமும், இடது கையைத் தொங்கவிட்ட நிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவ்விரு நடுகற்களும் காரப்பட்டுப் பகுதியில் நடைபெற்ற வீரப்போரினை நினைவு படுத்துகின்றன. நாட்டுக்காகப் போரிட்டு உயிர்விட்ட இந்நடுகற்களை இவ்வூர் மக்கள் ‘கன்னிக்கல்’ என்ற பேரில் வழிபட்டு வருவது போற்றுதற்குரியது” என்று அவர் கூறினார்.