அண்ணா தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை, நவ.1-
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அண்ணா தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அண்ணா தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார்.
இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.
இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்றது. இதில் பங்கேற்க செங்கோட்டையன் மதுரையில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன் சென்றார்.
அங்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க வந்த சசிகலாவை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் சேலத்தில் உள்ள வீட்டில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று மாலை துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து திடீரென ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் போது, செங்கோட்டையனை அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்தார்.
ஆலோசனைக்குப் பின் முடிவு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணா தி.மு.க.வின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியில் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக்கட்டுப்பாட்டை மீறி அண்ணா தி.மு.க.வுக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தால் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டையன் இன்று (அதாவது நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அண்ணா தி.மு.க. தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.