அண்டை மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை
அரசின் வரி வசூல் முறைகளால் பாதிக்கப்படுகின்ற ஆம்னி பேருந்துகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களுக்கு இடையே பயணிக்கின்ற பயணிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் தமிழக எண் கொண்ட 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரள போக்குவரத்து துறை பறிமுதல் செய்து ரூபாய் 70 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.
இதனால் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். தற்போது மோட்டார் தொழில் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும் தருவாயில் இது போன்ற பிரச்சனைகளால் வாகன உரிமையாளர்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கேரள அரசு போக்குவரத்து துறையின் இந்த செயலுக்கு காரணம் தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்கு இருக்கை அடிப்படையில் தமிழக அரசு வரி வசூல் செய்வதுதான் காரணம் என கூறப்படுகிறது.
இதனால் பிற அண்டை மாநிலங்களிலும் தமிழக அரசு பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு இருக்கை அடிப்படையில் வரி வசூல் செய்யப்படுகிறது. தமிழக அரசு பிற மாநில ஆம்னி பேருந்துகளிடமிருந்து வசூலிக்கப்படும் வரியை நிறுத்தினால்தான் தமிழகத்தில் இருந்து பிற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளிடமிருந்து அண்டை மாநில போக்குவரத்து துறை வரி வசூலை நிறுத்தும் என கூறப்படுகிறது.
அரசின் வரி வசூல் முறைகளால் பாதிக்கப்படுகின்ற ஆம்னி பேருந்துகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்ட சூழ்நிலையில் அதிகமாக பாதிக்கப்படுவது மாநிலங்களுக்கு இடையே பயணிக்கின்ற பயணிகள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
எல்லா பகுதிகளுக்கும் ரெயில் போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில் மக்கள் வசதியான பயணங்களுக்கு ஆம்னி போன்ற பேருந்து வசதிகள் அத்தியாவசியமான ஒரு தேவையாக இருக்கின்றது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில மக்களின் நன்மைக்காக விரைந்து தீர்வு கண்டு மீண்டும் ஆம்னி பேருந்து சேவையை ஆரம்பிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் இதற்கான தீர்வு காண வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?